பக்கம் எண் :

490துரை-மாலிறையன்

அண்ணலார் உடல்நலம் குன்றியது

அன்பால் வேண்டி முடித்ததன்பின் அண்ணல்பெருமான் உடல்நிலையும்
தென்பால் குன்றி ஒவ்வொருநாள் தீரத்தீர நலம் கெட்டார்;
பண்பால் உருவும் பணிவ தனால் படைத்த உளமும் கொண்டமயில்
பெண்பால் வணங்கும் ஆயிசாநற் பெருமா மணியே துணைஇருந்தார். 42

அபூபக்கரைத் தொழுகை நடத்தக் கூறினார்கள்

மயக்கம் காய்ச்சல் மெய்ச்சோர்வு மாறி மாறி வந்ததனால்
இயக்கம் குன்றி ஓரிடத்தில் இருந்த பெருமான் தொழுகைதனைச்
செயற்கும் இயலா நிலைபெற்றார் சிறக்கத் தொழுகை நடந்திடவே
நயக்கும் அபூபக் கர்தம்மை நடத்து கென்றார் நாயகமே! 43

என் தந்தை திருக்குர்ஆன் கேட்டாலே அழுவாரே!

ஆயி சாநற் பெரு மாட்டி அண்ணல் ஆணை கேட்டவுடன்
நேய முடனே என்தந்தை நிகழ்த்த வேண்டும் தொழுகை என்றீர்
தூய அன்பால் திருக்குர்ஆன் சொல்லச் சொல்லக் கேட்பாரேல்
தோயும் கண்ணீர் பெருகிடவே தோன்ற அன்றோ நின்றிடுவார்? 44

தொழுகை தடைபடுமே!

தொழுகை மேலும் தொடராத சூழல் ஆங்கே ஏற்படுமே
அழுகை பள்ளி வாசலிலே அதுதான் தோன்றின் நலமாமோ?
மெழுகை வைத்த நெஞ்சுடையார் மேன்மை யான தந்தையரால்
தொழுகை இடையீ டிட்டிடுமே தூய இடத்தில்” எனச் சொன்னார். 45

அபூபக்கரே தொழுகை நடத்த வேண்டும்

எதுதான் நடந்த பொழுதினிலும் எனக்குப் பின்னே இறைஇல்லம்
அதனில் தொழுகை மேற்கொள்ள அபூபக் கர்தான் நலமென்றார்;
அதனால் அன்று முதலாக அன்பர் தாமே இமாமத்தாய்ப்
பொதுவில் நின்று தொழுகையினைப் புகழ் மாறாமல் நடத்தினரே! 46

அருளுரை தொடங்கினார்

முறையாய்த் தொழுகை நடந்துவர முகம்மது ஓர்நாள் ஆர்வத்தால்
மறையே முழங்கும் நற்பள்ளி வாசல் சென்றார் தோழரொடும்
நிறைவாய்த் தொழுகை மேற்கொண்டு நேரில் அமர்ந்து மனங்கவரும்
இறையைப் புகழ்ந்தே அருளுரையை இறுதி யாக வழங்கினரே! 47