அண்ணலாரின் இறுதி அறிவுரை
எல்லை யில்லாப் பெருமைஉள இனிய வானின் அருந்தூதர்
பல்லைத் தேய்த்து நலம்பண்ணிப் பக்கம் இருப்பார் தமைப்பேணிச்
சொல்லை உதித்தார் “அடிமைகளைத் தொடர்ந்(து) இங்(கு)
அன்பு செய்யுங்கள்
நல்ல முறையில் தொழுகைஎலாம் நடத்தி வருக வரு”கெனவே; 74
உடல் அமைதியானது
காலம் எல்லாம் அன்புமனம்
கனியச் செயவே வாழ்ந்த நபி
மேலும் மேலும் நோய் வளர மிகவும் அமைதி நிலை உற்றார்;
காலும் கையும் அசைவில்லை கண்ணின் இமையும் திறக்கவில்லை
கோல மணிவாய் இதழ்மட்டும் குவிந்து மலர்ந்து
கொள்கையுடன்; 75
அண்ணலாரின் இறுதிமொழி
“இறைவன் அல்லாஹ் தோழனிடம் இறைவன் அல்லாஹ் தோழனிடம்
இறைவன் அல்லாஹ் தோழனிடம்” என்னும் தொடரே மூன்று முறை
மறைவாய் இதழ்கள் பொலிந்திடவும் மக்கா மதினா அருட்கோமான்
உறையும் ஆவி ஒளிமெய்விட்(டு) உயர்வான் நோக்கிச்
சென்றதுவே! 76
எல்லாம் அமைதியானது
அலையும் கடலின் அலைஓசை அமைதி உற்று நிலைபெறவும்
மலையும் காடும் அணிவயலும் மணலும் புள்ளும் விலங்குகளும்
இலையும் கூட இமைப்போதில் “இசுலாம் இசுலாம்”
எனும் ஒலியே
நிலையும் படியாம் ஒலிகேட்டு நெகிழ்ந்து நிற்கும்
நிலைகண்டார்; 77
அன்புப்பணி செய்து
இறைவனைப் பணிவோம்
கடவுள் தன்னை நீங்கியவர் கடமை முற்றும் இயற்றியபின்
கடவுள் அடியே நிலைஎன்னும் கருத்தால் வானம் புகுந்தார்கள்;
அடரும் தீய வினைஎல்லாம் ஆகா எனவே புறந்தள்ளிப்
படரும் அன்புப் பணி செய்தே பணிவோம் தூய
இறைவனையே! 78
***
|