பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்497


7. இறைப்புகழ் மணிமாலைப் படலம்

இறைவன் ஒருவனே என்றவர்

ஒருவனே இறைவன்; அன்பால்

ஒளிர்பவன் காணத் தக்க

உருவிலன் தீமை யாவும்

ஒழிப்பவன் தானே என்னும்

அருமையை உலகம் காண

ஆற்றலார் தூதர் தம்மைப்

பெருவள வையம் தன்மேல்

பிறப்பித்த பெரியோன் வாழ்க! 1

இறைவனே நலம் செய்ய வலியவன் என்றவர்

“இணையிலான் எவ்வெ வர்க்கும்

இனிமையே தரவும் வல்லான்

துணையிலான் தூய நெஞ்சுள்

தோன்றுவான்” என்று தன்னைத்

திணைஎலாம் வணங்கு மாறு

தெரிவிக்கத் தூதர் தம்மை

வினைசெய அனுப்பி வைத்த

விண்ணிறை அல்லா! வாழ்க!! 2

அல்லாவே பேரருளாளன்

அளவிலா அருளும் தூய

அன்பையும் உடையோன்; தொண்டர்

உளமெலாம் நிறைவான் என்னும்

உயர்ந்ததன் மாண்பு கூற

வளமனத் தூதர் தம்மை

வையத்துக் கனுப்பி வைத்த

விளைவினால் பேரின் பத்தை

விளைவித்த அரியோன் வாழ்க! 3