பக்கம் எண் :

50துரை-மாலிறையன்

மக்காவில் கொடும்பஞ்சம் ஏற்பட்டது

ஏழுவய தேஆன வானத் தூதர்

எட்டுவன எல்லாம்நன் னலமே ஆகச்

சூழுபவர் எல்லாரும் தெரியக் கண்டார்

சுடர்மக்கா நகரத்தில் என்றும் காணாப்

பாழுமொரு கொடும்பஞ்சம் பற்றி வாட்டப்

பட்டினியும் சாக்காடும் பெருகி மக்கள்

கூழுந்தான் இல்லாமல் வாடிப் போகும்

கொடுந்துன்பம் கண்டுஅப்துல் முத்தலிப்பே: 58

இறைவனிடம் வேண்டினர்

பொற்பாத முகம்மதுவை அழைத்துப் போய்ஓர்

புகழ்மிக்க மக்காவின் அருகில் உள்ள

கற்பாறை மீதமர்ந்து கைகள் நீட்டிக்

கடவுள்தன் புகழொன்றே நினைவில் தோன்ற

நற்பாதை காட்டுகெனக் கூறி மக்கா

நலம்பெறவே வேண்டுமெனத் தொழுகை செய்தார்

சொற்பட்ட உடனேவான் முகிலும் சூழ்ந்து

தொடர்மழையால் மக்காஊர் பொலிந்தது அந்நாள்; 59

எதிர்த்துவந்த அபசி நாட்டாரும் தோற்றனர்

அடுத்தடுத்து மக்காநல் லூரில் நன்மை

அத்தனையும் பெருகிவர அபசி நாட்டோர்

தொடுத்ததொரு போர்தன்னில் மக்கா ஊர்க்குத்

தோன்றியதோர் வெற்றிஎன்றும் சொல்லக் கேட்டார்

உடுத்தபுகழ் அப்துல்லா முத்தலிப்பும்

உளம்மகிழ்ந்தார் “இன்னவகை வெற்றி எல்லாம்

கொடுப்பதுநம் முகம்மதுவின் மாண்பால்” என்றே

கொடுக்கும்இறை புகழ்ஒன்றே பேசி னாரே! 60