பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்501


அன்னையின் அடிகளே வீடு என்றவர்

அன்னையின் அடிகளே அரியவீட் டுலகென
எண்ணி வாழ்கவென் றியம்பிய தூதரைப்
பொன்வள வையம் போகென விடுத்த
தன்னிகரிலானைத் தாழ்ந்து இறைஞ்சுவமே! 15

அடிமை நிலையினை நீக்குக என்றவர்

அடிமைகள் இல்லை அனைவரும் சமமே
கொடுமைகள் செய்தல் குற்றமென் றுரைத்த
நெடியகோ மானை நீள்புவி அனுப்பிய
முழுமுதலோனைத் தொழுதிடு வோமே! 16

அநாதைக்கு அன்பு காட்டுக என்றவர்

தந்தைதாய் இலாத தனிஒரு சேயைச்
சொந்தமாய் எண்ணிக் காத்திடு வோரே
நந்தமர் என்ற நபிகளை அனுப்பிய
செந்தணாளன் புகழ் செப்பிடு வோமே! 17

இறப்பு இயற்கை என்றவர்

இறைவனை விட்டு நீங்கியே வந்தோம்
இறைவனை அடைதல் இயற்கையே என்ற
நிறைபுகழ் அண்ணலை நிலத்திற் கனுப்பிய
அறநெறி யவன்புகழ் அணிசெய் வோமே! 18

எளியராய் இனியராய் வாழ்ந்தவர்

எளியர்க் கெளியராய் இனியராய் வாழ
ஒளியுறு செல்வரை உலகிற்கனுப்பிய
வலிய அல்லாவின் வண்புகழ் மாண்பை
ஒளியா நெஞ்சால் உரைத்துயர் வோமே! 19