பக்கம் எண் :

502துரை-மாலிறையன்

ஏற்றத் தாழ்வினை அகற்ற வந்தவர்

கள்ளமாய் வந்த கயவர் தமக்கும்
உள்ளமே நயந்த உண்மை யாளரை
பள்ளம் மேடுற்ற பாரகம் அனுப்பிய
வள்ளலாம் இறைவனை வணங்கிடுவோமே! 20

வறிதே வந்தோம் வறிதே மீள்வோம்

வானை விட்டு வரும்போது

வறிதே வந்தோம் அவ்வாறே

வானை நோக்கிச் செலும்போதும்

வறிதாய்ச் செல்ல வேண்டுமென

ஆனநல்ல கருத்துரைக்க அண்ணல்

நபியை படைத்தளித்துத்

தீனை வளர்த்த தெய்வத்தின்

திருத்தன்மையை வாழ்த்துவமே! 21

அகம் குழைந்து வாழ்த்துவோம்

பொல்லாத் தீய மனத்தாரும் பொருந்தா நெறியில் நின்றாரும்
நல்லா ராகத் தூதுவராய் நபியார் தம்மைப் பிறப்பித்த
வல்லான் வான வளத்தானை வையத்துக்கோர் கோமானை
அல்லா அல்லா எனஏத்தி அகம்குழைந்தே புகல்வோமே! 22

அன்பால் ஏத்திப் போற்றுவோம்

நேர்மை சற்றும் மாறாத நெறியின் பெருமை உணர்த்துகிற
நீர்மை கொண்ட நெடியவரை நெடும் பாரதனில் வரச்செய்த
கூர்மை யான படைப்பாற்றல் கொண்ட தூய அறிவினனை
ஆர்வம் பொங்கி மேலோங்கி அன்பால் ஏத்திப் புகழ்வோமே! 23