வாய்மை நெஞ்சால்
வாழ்த்துவோம்
எண்ணை எழுத்தைக் கல்லாத
எளியோராக வாழ்ந்தாலும்
மண்ணை நிமிர்த்தும் நெறிதன்னை
மக்கட் கேற்ற வகை கூறி
விண்ணை வாழ்த்தும் நெறியோரை
வியன்மா வுலகில் பிறப்பித்த
வண்ணத் தொளிசெய் அல்லாவை
வாய்மை நெஞ்சால்
வாழ்த்துவமே! 24
தமிழால் பாடி மகிழுவோம்
மாந்த நேயம் மண்மீதில்
மலரச் செய்ய வேண்டுமென
ஏந்தல் நபியை அனுப்பிவைத்த
எல்லாம் வல்ல ஆண்டவனை
ஏந்து கைகள் கொண்டுமனம்
இணைந்து நின்று கனிவோடு
தாழ்ந்து தொழுது நெஞ்சுருகித்
தமிழால் பாடி மகிழுவமே! 25
புகழ்பாடி வணங்குவோம்
களவும் குடியும் இல்லாத
கட்டுப் பாட்டை உருவாக்கி
அளவில் லாத பெருந்தொண்டால்
அன்புப் பணியே செய்தவரை
உளத்தில் ஒளியே ஏற்றிஉயர்
உலகம் வரவே உய்த்தவனின்
வளமே உடைய புகழ்பாடி
வாழ்த்திப் போற்றி
வணங்குவமே. 26
|