பக்கம் எண் :

504துரை-மாலிறையன்

அருளை எண்ணி வாழ்த்துவோம்

நினைத்தால் நெஞ்சு கலங்குகிற

நிலையில் வாழ்ந்த அரபியர்கள்

அனைத்துப் பேரும் ஒன்றாகி

அல்லா அல்லா என ஏத்த

இணைத்து வைத்து நிலவுலகில்

இசுலாம் நெறியை வளர்த்தவரை

அணைத்து நபியாய் ஆக்கியவன்

அருளை எண்ணி வாழ்த்துவமே! 27

பொய்தீர் ஒழுக்க நெறி நிற்போம்

மெய்யின் வருத்தம் பாராமல்

மிகுந்த பசியும் எண்ணாமல்

வெய்யில் குளிரை நோக்காமல்

வினையே புரியும் நபியாரைச்

செய்க பணிஎன் றுலகத்தில்

செல்ல வைத்த ஆண்டவனைப்

பொய்தீர் ஒழுக்க நெறிநின்று

போற்றி நீடு வாழுவமே! 28

மாறா நாக்குக் கொண்டார்

கோடா நாக்குக் கொண்டபெருங் கொள்கைஉடைய கோமானை
ஆடா தெரியும் விளக்கொளிபோல் அமைதிஉள்ளம் கொண்டவரைக்
கூடார் கூடக் கூடிவந்து கொள்கை ஒன்றச் செய்தவனை
வாடா மலர்போல் சொல்லெடுத்து வாழ்த்தி வாழ்த்தி மகிழுவமே! 29

நற்றமிழால் வாழ்த்துவோம்

உலக இன்ப துன்பத்தில் ஒட்டா உள்ளம் உடையவராய்
குளத்தின் தாம ரைஇலைபோல் குவல யத்தில் வாழ்ந்தவரை
அளவில் லாத பணிசெய்ய அனுப்பி வைத்த அல்லாவின்
நலமே கூறி நற்றமிழால் நாடிப் போற்றிப் புகழ்வோமே! 30