பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்505


வெற்றி அளித்தவனை வாழ்த்துவோம்

நல்லகுடிப் பிறப்புடைமை அறிவும் அன்பும்

நட்புமுள தனிப்பெருமை தூய்மைத் தன்மை

வல்லமனத் துணிவுடைமை வாய்மை நேர்மை

வாய்த்ததுணை நலமுடைமை காலம் எண்ணிச்

சொல்லுகிற வலிமையொடும் கடமை மாறாத்

தோன்றலினைத் தூதுவராய் அனுப்பி வைத்து

வெல்கஎனத் துணைநின்ற அல்லா தன்னை

வேண்டுமனத் தொழுகையினால் வாழ்த்துவோமே! 31

முதலவனைப் போற்றுவோம்

ஒழுக்கம்உயர் விழுப்பமனம் அழுக்காறின்மை

ஒழிக்கவரு வோர்தமக்கும் இழுக்கம் செய்யாப்

பழுத்தமனப் பண்புடைமை பேரா சையால்

பழிக்கும்வினை செய்யாமை இறைக்குமுன்னே

தொழக்குனிவ தன்றி அவன் படைத்திருக்கும்

தொல்லுலகோர் எவர்முன்னும் தொழாமை கொண்ட

முழுத்தூய முகம்மதுவைத் தூது விட்ட

முதலவனின் புகழ்கூறிப் போற்றுவோமே! 32

ஐம்புலன் ஒடுங்கி வணங்குவோம்

ஈகையினில் கோமானை இனிமை வாய்ந்த

இல்வாழ்க்கைப் பெருமானை முயற்சி யாவும்

வாகையுற வாழ்ந்துயர்ந்த நற்பெம் மானை

வற்றாத அருளுடைய ஊற்றுத் தேனைச்

சாகையிலும் தீவினைஎண் ணாமல் வானைச்

சார்ந்தநபி அம்மானை, விண்ணின் தூதர்

ஆகஎன விட்டவனை அல்லா தன்னை

ஆனஐந்து புலனொடுக்கி வணங்குவோமே! 33