|
வணங்குவதே வாழ்க்கையின் பெருமை
எல்லையிலா அருட்கடலின் பெருக்கின்
மேலே
இதயமரக் கலம்செலுத்தும்
தொண்டரெல்லாம்
தொல்லையிலாத் திருப்பயணம்
தொடர்வதற்குத்
தூயதிருக் குர்ஆன் சீர்
ஒளியைக் காட்ட
இல்லைஇல்லை வேறொருவர்
இல்லை என்றே
எண்ணிஉயர் முகம்மதுவை
அனுப்பி வைத்த
வல்லவனை வானவனைப்
புகழ்ந்து பாடி
வணங்குவதே வாழ்க்கைஇதன் பெருமையாமே! 34
அவனைத் தொழுது புகழுவோம்
பொய்புணர்ந்த மக்கள்சூழ்
மண்ணை நோக்கிப்
புகழ்புணர்ந்த பெருமானை
நபியாய்ப் போக்கி
மெய்யுணர்வு கொண்டவரே!
மிகுதியாக
மேன்மைநலம் கொண்டவரே!
மக்கட்கு அன்பே
செய்துணர்வு நலம்பெருகச்
செய்து பின்னே
செழுவானம் வருக” எனச் சொல்லிவான்
செங்
கையுணர்வே காட்டிய அக்கடவுள்
தன்னைக்
கலந்தொன்றித் தொழுகையினால் புகழு வோமே! 35
மிகுநலம் செய்தவனை
வணங்குவோம்
“புகழ்க்குரியோன் அல்லாவே!”
என்று சொன்ன
புகழ்ந்திடவே பட்டவராம்
நபியார் மாண்பைப்
பகர்வதற்கும் எளிதாமோ? வாழ்க்கை யாவும்
பணிவதற்கே உரித்தாகும்
என்று சொல்ல
அகல்நெடுவான் பெருமையினை விளக்கிக்
காட்ட
அகம்மதுவை அறியாமை விலக்கிக்
காட்டி
மிகுநலமே செய்தவனாம் இறைவன்
மாண்பை
மேன்மையுற ஒன்றாகித் தொழுவோம் யாமே! 36
|