பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்507


வணங்குவதே வாழ்க்கையின் பயனாகும்

நொய்யஉரை சொன்னவரும் நோய்மைநீங்க

நோக்காடு செய்தவரும் தாக்கா தோங்க

ஐயமது கொண்டவரும் உய்யும் வண்ணம்

அன்புமது தான் ஊட்டி இன்பம் காட்டி

உய்யவழி தந்தவரைப் பெய்யமிழ்த

உண்மைநெறி சொன்னவரை அண்ணலாரை

வையம்வர வைத்தவனின் மெய்ப்பா தத்தை

வணங்குவதே வாழ்க்கையிதன் பயனும் ஆமே! 37

என்னவென்று கூறுவோம்?

கன்னலெனில் நுனிக்கொழுந்து கசந்து போகும்

கற்கண்டே எனஎன்சொற் கொண்டு சொன்னால்

பின்னதுவும் தெவிட்டிவிடும் நாவி னிக்கும்

பிழிநறவே எனில்கூட்டின் புழுமுன் தோன்றும்

முன்னருள கனிஎன்றே மொழிவேன் ஆயின்

முதிர்கனியும் பின்னழுகிக் கெடுமே அன்றோ?

என்னவென்றே அழைத்திடுவேன்? இறைவா! உன்றன்

எழில்முகம் மதுதூதர் இனியா ரையே! 38

இமைப்போதும் மறவோம் தொழுவதற்கே

வலைகட்டிப் பிடித்த ஒரு மானுக் காக

வானகத்துத் திருத் தூதர் பிணையாய்நின்று

மலைசுற்றி வாழுகிற அரபி வேடன்

மனம்மாற்றி அருள்சுரந்த இறைவா! அன்பு

நிலைசுட்டிக் காட்டிவிட வையகத்தின்கண்

நெடியபுகழ்த் தீன்இசுலாம் தந்த அல்லாஹ்!

இலைஉன்னை விடப்பெரியோன் ஆதலாலே

இமைப்போதும் மறவோம்யாம் தொழுவதற்கே! 39