|
எளியநாவால் எவ்வாறு புகழ்பாடுவோம்?
அன்பிருக்கும் நெறிகூறி
நன்மை நாடும்
அறிவிருக்கும் மக்களுக்குத்
தெளிவு காட்ட
வன்பிருக்கும் பகைசூழ
நடுவில் நின்று
வளமிருக்கும் இசுலாத்தை
வளர்த்தி ருக்கும்
பண்பிருக்கும் பெருமானைப்
பார்க்குத் தூதாய்ப்
பணிவிருக்கும் படிவிடுத்த
இறைவா! உன்னை
என்பிருக்க இடமில்லா
எளிய நாவால்
என்சொல்லிப் புகழ்பாடி வாழ்த்து வோமே! 40
இறைவனுக்கு நன்றி
அகர முதல எழுத்தே போல் ஆதி
பகவன் முழுமுதலே பார்மேல் - முகம்மதுவை
நன்றியங்கும் வண்ணம் நடப்பித்த தூயவனே!
நன்றிஉரைக் கின்றோம் நயந்து. 41
வையத்துள் வாழ்வாங்கு
வாழவந்தவர்
வையத்துள் வாழ்வாங்கு வாழவந்த நல்லவரைச்
செய்யத் தகுந்த செழும்பணியே - செய்வித்த
வானத் தொளிநீயே வற்றா அருள்! எவர்க்கும்
காணவோ வாராக் கரும்பு. 42
தனக்குவமை இல்லாதவன்
தனக்குவமை இல்லாத் தனிப்பொருளே!
மக்கள்
மனக் கறையைப் போக்கவே மாண்பார் - வினைநபியைப்
பற்றற்றான் நின்பற்றே பற்றினராய் உற்றளித்த
நற்றாளை வாழ்த்துவோம் நாம். 43
நீயே அனைத்துக்கும்
அணி
பொய்யாமை பொய்யாமை ஆற்றிஒரு தீவினையும்
செய்யா நெறிநின்ற செம்மலினை - வையம்
தனைத்திருத்த வைத்த தனித் தலைவா! நீயே
அனைத்துக்கும் மேலாம் அணி. 44
|