|
வான் மதுவோ முகம்மது?
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை முடிக்க அருவான் - மதுவை
முகம்மதுவாய் ஆக்கியே முன்னனுப்பி வைத்த
தகைமை எண்ணி வாழ்த்துவோம் தாழ்ந்து! 45
இறைவா! நீ எம் நெஞ்சுள்
மலர்
கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம்
ஆங்கதுபோல்
மண்ணிற் கணியாம் மகம்மதுவை - எண்ணிப்
பணிசெய்ய வைத்தாய் பரிவோடு விண்ணின்
மணிநீ எம் நெஞ்சுள் மலர். 46
பொன் போல் சுடர்
விட்டவர்
சுடச்சுடரும் பொன்போல் சுடர்விட்டார் துன்பம்
சுடச்சுடவே ஒளிர்ந்தார் தூய - சுடர் நபியே
அண்ணலார் தம்மை அனுப்பிய அல்லாவின்
பண்ணே நயப்போம் பணிந்து. 47
வேண்டுதல் வேண்டாமை
இலான்
மனத்துக்கண் மாசிலராய்
வாழ்ந்த பெருமானை
எனைத்துக்கும் மேலாய் இறுக்க - அணைத்தவனே!
வேண்டுதல் வேண்டாமை இல்லாத விண்ணவனே!
வேண்டுகிறோம் நின்முன் விழுந்து. 48
அடைவதற்கு அரிய அழகு
எண்ணிய எண்ணியாங் கெய்திய
தூதரினை
விண்ணியல் நீக்கி வியன்வையத் - தின்னலறச்
செய்த கடவுளின் செம்மாண்பைப் போற்றுவதே
எய்தற் கரிய எழில். 49
இறைவனே துணை
ஒற்றாடி ஒற்றாடி உன்றன் ஒளிகண்டுன்
நற்றாள் தொழுத நபியாரை - உற்றவெலாம்
முற்றும் துறந்த முகம்மதுவைத் தூதுவராய்ச்
சொற்றவனே! நீயே துணை. 50
|