பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்55


நபியாரின் மாண்பை உம்மால் அழிக்க இயலாது

இன்ன வாறு கூறியவர் இதயம் உணர்ந்த புகைறாவும்
“இன்னல் செய்ய வந்தோரே! இயம்புகின்றேன் கேளுங்கள்
கன்னல் சுவையைக் கசப்பாக்கும் கருத்தோ எறும்பால் ஆகாது
மன்னர் நபியின் மாண்புதனை மாற்ற நும்மால் இயலாது; 16

நபிக்குத் தீங்கிழைப்போர் அழிவார்கள்

பெருமான் நபிக்கு நாம் செய்யும் பிழைகள் எல்லாம் கருவாகி
இருளாம் நகரம் புகுதற்கே இடமாய் ஆகும்; குடிஎல்லாம்
பொருளும் புகழும் இல்லாமல் பொலிவே இன்றிப் பாழாகும்
மருளும் வாழ்வில் அமிழ்வார்கள் மனத்தில் கொள்க” எனஉரைத்தான். 17

உடனே மக்காவுக்கு அனுப்பி வையுங்கள்

புகைறா சொல்லின் பொருளுணர்ந்து புனிதம் அடைந்த நல்லோர்கள்
நகைவாய் நெஞ்சம் நலம்பெறவே நவின்று வாழ்த்திச் சென்றவுடன்
தகையார் அபூத்தா லிப்பவர் பால் “தயங்கா தின்னே நபியாரை
வகையாய் அனுப்பு”கெனவேண்டி வணங்கி உரைத்தான் புகைறாவே! 18

மக்காவுக்கு முகம்மதுவை அனுப்பி வைத்தார்

நன்மை தீமை நாடி நலம் நல்கும் நெறியின் உரைதேர்ந்து
புன்மை சூழும் சாம்நகர்க்குள் புகுதல் நீக்கி முகம்மதுவை
வன்மை யாளர் அபூபக்கர் வாய்த்த நல்ல துணையாக
இன்மை இலாமக் காவுக்கே இசைவாய் அனுப்பி வைத்தவுடன்; 19

முகம்மதுவுக்குப் பதினான்கு வயது ஆனது

மற்ற வணிக மக்களுடன் மாந்தர் அபூத்தா லிப்பவர்கள்
குற்ற மற்ற சொல்பேசிக் குறையா வணிகம் புரிந்தவுடன்
வற்றாச் சோலை வளம்கெழுநல் மக்காப் பதியை அடைந்தார்கள்
நற்றாள் நபியார் வயதன்றே நான்கும் பத்தும் நடந்ததுவே! 20

கைசு படை மக்காவைத் தாக்க வந்தது

மகிழும் மக்கா நல்லோர்கள் வருந்திப் பதறும் வகையினில்ஓர்
பகையும் வலியும் கொள்கைசு படையே மக்கா நகரத்தை
வகிர்ந்து போடும் நோக்கத்தில் வந்து முட்டக் கண்டவர்கள்
உகிர்பல் வேங்கை உருக்கண்ட ஒருமான் கூட்டம் போலானார். 21