முகம்மது உடன் இருக்க அச்சமில்லை
“இதுநாள் வரையில் கைசு அதனை எதிர்த்து வெல்ல இயலாதோம்
புதுமை இல்லை தோல்வி”எனப் புகன்றோர் நடுவில் சிலர்கூடி
“இதுவா பெருமை? நம்வீரம் இருக்கும் எனினும் நமக்குமுகம்
மதுவே இருக்க கலக்கமது மனத்தில் தோன்றல்
நன்றாமோ? 22
வீரத்தோடு கைசு படையை எதிர்த்தனர்
முயலைச் சாய்த்த அம்பைவிட முன்னேயானை அதைக்கொல்ல
முயன்ற ஈட்டி ஏந்துவதே மூத்தோர் நமக்கும் உயர்வாகும்;
இயன்ற வாறிங்கு எதிர்க” என்ற இபுனுசுத்ஆன்
என்பவரும்
வியன்மா முகம்மது அன்பரொடு வெற்றி நோக்கிப்
புறப்பட்டார்; 23
கைசுபடை சிதறி ஓடியது
பகையாய் வந்த கைசுபடை பதறி ஓடி நாற்றிசையும்
புகையாய்ப் பரவி மறைந்து விடப் புதிய வெற்றி கண்டார்கள்;
தொகையாய் வந்த பகை வீரர் தூசு போலக் கெட்ட
தெலாம்
வகையாய் வந்த வளத்துநபி வரத்தால் என்றே
மகிழ்ந்தனரே. 24
அண்ணல் முகம்மது வயது இருபத்தைந்து
ஆனது
உறுவய திரண்டு பத்தும் ஓரைந்தும் ஆன அண்ணல்
நறுமணம் மிக்க மெய்தான் நல்கிடும் ஒளியும் அன்பும்
பொறுமையும் வீரப் பண்பும் பொன்னொளிர் உருவும் மேன்மை
பெறுநலத் தெழிலும் வாய்மை பேணிடும் மனமும் பெற்றார். 25
பணி ஏதும் இல்லாமல் இருந்தனர்
ஆண்மகன் என்று பேசும் அத்துணைப் பெருமை யாவும்
பூண்மகன் ஆனார்; ஆனால் பொன்பொருள் ஈட்டுதற்காம்
மாண்பணி ஏதும் இல்லா முகம்மது நெஞ்சம் வாடி
நாண்மிகக் கொண்டு வாழ்க்கை நடத்துதல் புன்மை
என்றே; 26
நானும் மற்றவர் போல் வணிகம் புரிய
வேண்டும்
நற்றவர் பெரிய தந்தை நலத்தவர் அபூத்தாலிப்பை
உற்றவர் உரைத்தார் “அப்பா, ஊரிலே இருப்பார் எல்லாம்
கற்றவ ராகச் செல்வம் கண்ட வராக உள்ளார்
மற்றவர் போல யானும் மாறவேண்டாமா ஈங்கே? 27
|