வாழ்விற்குப் பொருள் வேண்டும்
பொருளிலார் தம்மை வையம் பொருளாக மதிப்ப தில்லை;
உருவினால் மனித ராக உலவலாம் அன்றி அன்னார்
தெருவிலோர் நாய்க்கும் கேடாய்த் திரிபவர் தாமே; பொல்லா
இருள்எனும் வறுமை மாய்க்க எழிற்பொருள் ஒளியே
வேண்டும்; 28
இல்லறம் நல்லறமாகப் பொருள் வேண்டும்
இல்லாரை எள்ளும் வையம் இருப்பாரை ஏத்தும் தீமை
வல்லாரை அழிக்கத் தக்க வன்படை பொருளே ஆகும்
நல்லற இன்பம் தோன்ற நற்பொருள் உதவும்; உற்ற
இல்லறம் பேணு தற்கும் எல்லார்க்கும் செல்வம்
வேண்டும்; 29
மன்னர்க்கும் பொருள் வேண்டும்
மன்னரும் ஆட்சி செய்ய மாண்பொருள் வேண்டும் வாழ்வில்
மன்னிடும் புகழுண்டாக வண்பொருள் வேண்டும் நில்லா
மின்னலைப் போல் என்றாலும் மென்பொருள் துணையே இன்றி
நன்னலம் தோன்றா” தென்றே நவின்றனர் பெருமானாரே! 30
வீண்மகனாக வாழ விரும்பவில்லை
“ஆண்மகன் என்று வாழ அரும்பொருள் வேண்டும் அந்த
மாண்பொருள் வேண்டுமானால் வாணிகம் புரிய வேண்டும்
தூண்எனும் வாணிகத்தைத் தொடங்கிட முதலும் வேண்டும்
வீண்மகனாக வாழ விரும்பிலேன்” என்றும் சொன்னார். 31
சாம் நகருக்குப் போனால் தீங்காயிற்றே
நெஞ்சினில் நேர்மை கொண்டு நிகழ்த்திய புதல்வர் கூற்றை
அஞ்சியே கேட்ட போதும் அபூத்தாலிப் பண்ணல் கோமான்
வஞ்சமே மிக்கார் வாழும் வகையுள சாம்வல் லூரில்
பஞ்சென அனுப்பின் அந்தப் பாவியர் தீவைப் பாரே? 32
இருப்பினும் வணிகம் புரிய முதல்
வேண்டுமே
இருப்பினும் வணிகம் செய்ய இசையவே வேண்டும் என்று
மறுத்தெதிர் பேசிடாமல் வள்ளலை அனுப்பு தற்குப்
பெருத்தநல் முதலே வேண்டிப் பிழையிலா மக்கா ஊரில்
இருக்கு மோர் செல்வர் பற்றி இயம்பினார் புதல்வருக்கே! 33
|