|
மக்காவில் குவைலீது என்னும் செல்வர்
உள்ளார்
அறிவொடு கல்வி வீர ஆற்றலும் பெற்ற நல்லோர்
வறியவர் நிலையைக் கண்டு வருந்திடும் குவைலீ தென்பார்
நெறியினில் நின்று சேர்த்த நெடும்பொருள் கொண்டார் என்றும்
குறுமனம் இல்லார் நன்மை குறைவிலா மக்கா வாழ்வார்; 34
குவைலீதின் மகள்
கதீசா என்பவராவார்
பழகிய கிளிபோல் பேச்சும் பால்அன்ன நடையும் கண்ணில்
ஒழுகிய அருளின் வீச்சும் ஒப்பற்ற கலைவெண் திங்கள்
மெழுகிய முகமும் முத்து மிளிர்நகைப் பல்லும் கொண்ட
அழகிய கதீசா பெண்ணின் அருந்தந்தை யாவார்
அன்னார்; 35
கதீசா அழகில் சிறந்த அம்மையார்
அயல்வரும் எவரும் அந்த அணங்கினைக் கண்ட போதில்
கயல்வழி என்ற வர்தம் கண்ணையே பார்ப்பார்; பச்சை
வயல்வெளித் தூய்மை போல வாய்மைசேர் நெஞ்சம்கொண்ட
இயல்பினைக் கண்டவர்கள் இமைக்கவும் மறந்து
நிற்பார்; 36
பன்னிறம் கொண்டு செய்த பாவை
போன்றவர்
கண்ணிலே நீலம்; அன்பின் கனிவிலே பசுமை; கூந்தல்
வண்ணமோ கருமை; பேசும் வாயிதழ் செம்மை; மேனி
தண்ணிழல் பொன்மை; அன்பு தவழ் மனம் வெண்மை
ஆகப்
பன்னிறத் தாலே செய்த பாவையே அன்னார் ஆனார்; 37
பூவையர் குலத்துப் புனிதை
பாவையே என்றால் கூடப் பாலையே அளிக்கும் தாய்போல்
தேவையே அறிந்து யார்க்கும் திகழ்நலம் புரிவார் வாழும்
பூவையர் குலத்தி னுக்கோர் புனிதையார் சிறக்கும் இந்த
மாவையப் புகழைக் கொண்ட மடந்தையார் இவரே
ஆனார்; 38
அவரிடம் போய்ப் பொருள் கேட்போம்
“அன்னவர் தன்பால் ஏகி அருஞ்செல்வம் கேட்டுப் பெற்று
நன்னர்சாம் நகரம் சார்ந்து நம்பிக்கை வணிகம் செய்து
பின்னர்நாம் வருவோம்” என்றே பேசினார் அபூத்தாலிப்பு
கன்னல்சேர் சுவைஉண்டாற்போல் களித்தனர் நபிக்கோ மானே! 39
|