பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்59


முகம்மதுவின் மாண்பைக் கதீசாவிடம் உரைத்தான்

கற்றவன் ஒருவன் நல்ல கலைமுகம்மதுவைக் கண்டு
பற்றவன் ஆகிச் செய்த பாவங்கள் தொலைந்த என்று
முற்றவும் அண்ணல் மாண்பை முழுவதும் எண்ணி எண்ணிக்
குற்றமில் கதீசா முன்னர்க் கூறிட விரைந்து சென்றான். 40

மேனி கத்தூரி மணம் வீசும்

“கள்ளவிழ் கூந்தல் கொண்ட கதீசாவே! மக்கா நல்லூர்
உள்ளவர் ஒருவர் வானோற்கு உரியநல் தூதர் ஆனார்
நல்லவராலே இந்த நாட்டிலே வளமை ஓங்கும்
கள்ளமில் லாரின் மேனி கத்தூரி மணமே வீசும்; 41

திருக்குர் ஆனைத் தருவார்

அமைந்தநன் னபியார் என்னும் அருங்குறிப் பதனைக் காட்டத்
தமதருங் கழுத்துப் பின்னே தான்ஒரு குறிப்பும் உண்டு
நமதுளம் தூய்மை செய்ய நவிலுவார் திருக்குர் ஆனை;
கமழ்மணக் கூந்தலாரைக் கடிமணம் புரிந்து கொள்வார்; 42

நீரே அந்தக் காரிகை

பெற்றஎன் அறிவுக் கேற்ற பெருமையால் ஆய்ந்த போது
குற்றமும் குறையும் இல்லாக் கோதையார் நீரே என்று
முற்றவும் நினைத்தேன் நும்பால் மொழியவும் வந்தேன்” என்றான்
கற்றவர் உரையைக் கேட்ட கதீசாநற் பாவை ஆங்கே; 43

அவரைக் கையுடன் அழைத்து வருக

பணிவுடன் நின்றி ருந்த பணியாளன் தன்னைக் கூவி
“மணிமொழி கூறும் அன்பு முகம்மது தம்பால் சென்று
கனிவுடன் பேசி ஈங்கே கையுடன் அழைக்க” என்றார்;
அணியமாய் நின்றான் தானும் அவ்வாறே அழைத்து வந்தார்; 44

இருவிழியால் கண்டு களித்தார்

ஒன்பது மணிக்கூட் டத்தின் ஓங்கலை புதுமை நன்மை
என்பவை எல்லாம் சேர்ந்த எழிலினை மண்ணில் விண்ணில்
மன்பதை காண ஒண்ணா மாண்பொளி தன்னை நேரில்
இன்றவர் காண்ப தைப்போல் இருவிழி யாலே கண்டார். 45