பக்கம் எண் :

60துரை-மாலிறையன்

தம்மை மறந்தார்

கண்டவர் கண்ணிமைக்கும் கருத்தையும் மறந்தார் கண்ணுள்
உண்டவர் உருவம் என்னும் உணர்வினார் ஆதலாலே;
உண்டதம் மூச்சுக் காற்றை உடன்விட மறந்தார் நெஞ்சைக்
கொண்டவர் மெய்ம்மணத்தைக் கொண்டதன் ஆசை யாலே! 46

கண்ணொடு கண்ணிணைந்தது

அண்ணலைக் கண்டபோதில் அணங்கினார் மெய்ம்மறந்தார்
தண்ணொளி அதுபோல் கண்ட தன்மைஇல் லாத தாலே!
வண்ணமா மயிலே அன்னார் வாய்ச்சொலே மறந்தார் தங்கள்
கண்ணொடு கண்ணிணைந்த காலமே ஆன தாலே! 47

இவரை நாமே மணப்போம்

மென்மலர்ச் செவியால் கேட்கும் மெல்லிசை மறந்தார் கோமான்
நன்மணிப் புகழே கேட்ட நல்லிசைப் பெருமை யாலே;
புன்மனம் மாற்ற வந்த புகழினார் இவரே என்றும்
நன்மணம் புணர்க்க வந்தோம் நாமென்றும் பெருமை கொண்டார்; 48

இதே நினைவோடு உறங்கப் போனார்

ஒருத்தாரை ஒருத்தர் தங்கள் உணர்வினால் ஒன்றிப் பின்னே
கருத்தினால் சுமந்து கொண்டு காதலார் பிரிந்த பின்னே
பெருத்தமா மணிபோல் நங்கை பின்னைஓர் இரவில் காதல்
பொருத்திய நெஞ்சத் தோடும் போய் உறங்கிடும் வேளையில்; 49

கதீசா கண்ட கனவு

குழுமிய விண்மீன் தங்கள் கூட்டத்தின் விலகித் தண்சீர்
கெழுமிய முழுமைத் திங்கள் கீழ்வந்து கதீசா அம்மை
அழகிய மடிமேல் ஆட அதுகண்டு முன்றா னையால்
எழிலுறப் போர்த்து வைக்கும் இயல்பில்ஓர் கனாவைக் கண்டார்; 50

கனாவின் உட்பொருள்

“திங்களாய் வந்தது அன்புச் செம்மலே, விண்ணை விட்டுத்
தங்களின் மடிமேல் வந்து தவழ்தல்செய் மணமே ஒக்கும்”
இங்கிவை நடக்கு மென்றே இயம்பினார் அறிஞர்; கண்கள்
செங்கயல் ஆகக் கொண்ட சீரியோர் கனவைக் கேட்டே; 51