|
காரிகை முகம்மது நினைவாகவே
இருந்தார்
கண்டதாம் கனவைக் கேட்டுக் கற்றவர் பொருளும் கூற
வண்டுகள் விழியாய்க் கொண்ட வாய்மைசேர் கதீசா நல்லார்
மண்துகள் காலில் தோயா மகம்மது நினைவே யாகக்
கொண்டுதாம் வாழ நன்மை கூடிய ஆங்கோர் நாளில்; 52
அண்ணலார் கதீசா இல்லம் அடைதல்
எண்ணிய இயற்றுகின்ற ஏந்தலார்
அபூத் தாலிப்பும்
விண்ணியல் பெருமை கொண்ட வெல்முகம் மதுவினாரும்
தண்ணியல் கதீசா அன்னை தம்மொளி இல்லம்
ஏகி
மண்ணிலே விண்ணகத்தின் மாண்புக்கோர் விதைஇட்டாரே! 53
வந்தவரை வணங்கி வாழ்த்தி
வரவேற்றார்
வந்தாரை வணங்கி வாழ்த்தி “வறியவள் என்றன் வீட்டில்
செந்தண்மை உடைய தங்கள் சீரடி பட்ட தாலே
முந்திநான் அடைந்த பேற்றின் முழுப்பயன் அடைந்துவிட்டேன்
வந்தநற் காரணத்தை வழங்குக” என்று கேட்டார்; 54
எங்களுக்குப் பொருள் வேண்டும்
“பெண்களுள் பெருமை பெற்ற பெருமனத் தீரே! என்றன்
கண்களுக்கு ஒப்பாய் உள்ள கனிமொழிப் புதல்வருக்கு
மண்ணினில் மணமுடிக்கும் மனத்துடன் இங்கு வந்தேன்
எண்ணிடும் நினைவுக்கு ஏற்ற எழிற்பொருள் எமக்கு
வேண்டும்; 55
அப்பொருள் கொண்டு வாணிகம் புரிவோம்
தரும்பொருள் கொண்டு யாங்கள் சாம்நகர் செல்வோம்; செய்து
வரும்ஒரு வாணிகத்தால் வளர்பொருள் ஈட்டி வந்து
திருமணம் முடிக்க உள்ளேன் திருவுளம் இல்லை யாயின்
இருவரும் வருந்த மாட்டோம்” என்றனர் அபூத்தாலிப்பே! 56
பழம் நழுவிப் பாலில் விழுந்தது
பழமது நழுவி வந்து பாலிலே விழுதல் போலக்
கழல்அடிக் கோமான் தானும் கவின்மொழி அபூத்தாலிப்பும்
தொழுதகை கற்பின் மிக்க தூயவர் கதீசா முன்னர்ப்
பழுதற இக்கருத்தைப் பகர்ந்திடக் கேட்ட நல்லார்; 57
|