|
விருந்து வைத்தார்
“தகைத்திரு மொழியீர்! தாங்கள் சாற்றிய மொழிகள் கேட்டேன்;
அகத்துள்ள செல்வம் எல்லாம் அடியனேற்கு உரிய தில்லை;
தகும்பொருள் யாவும் கொள்வீர் தடை யில்லை” என்று கூறி
வகைச்சுவை உணவு வைத்து வாய்மையார் உண்ணச் செய்தார்; 58
இருநூறு ஒட்டகப் பொருள் தந்தார்
பொருள்களைக் காக்கும் பேரைப் பொறைமகள் அழைத்து “நீர்போய்
இரும்பொருள் தம்மை ஈங்கே எடுத்து வந்திடுக” என்றார்
உறும்பொருள் இருபதாள்கள் ஒட்டகம் இரண்டு நூறும்
இரும்புநேர் ஒட்டகந்தான் இன்னொன்றும் கூட்டித் தந்தார். 59
மைசறாவை மெய்க்காப்பாளனாக அனுப்பினார்
பகைவர்கள் நெருங்கி வந்தால் பாய்ச்சிடப் படைவாள் தந்து
அகலாமல் அருகிருந்தே அருங்காவல் புரியும் வண்ணம்
தகும்உற வடிமை யான தனிநல மைச றாவை
முகம்மதின் கவசம் போல முன்கூட்டி அனுப்பி வைத்தார். 60
அறிஞன் ஊசாவைக் காண நேர்ந்தால்
புறப்படும் முன்னர் அன்பு பொருந்திய மைச றாவைச்
சிறப்புற அழைத்து “நீபோய் செம்மையோர் நலமே காக்க
இறைசெயல் படியே எல்லாம் இனிதுற நடக்கும்; ஆங்கே
மறைபுகழ் ஊசா என்னும் மாந்தரைக் காணக் கூடும் 61
நான் கண்ட கனவைக் கூறுக
காலங்கள் கணித்துக் கூறும் கலைநெறி ஊசா தம்மை
மேலும் நீ கண்டாயாகில் மிகும் என்றன் வணக்கம் கூறிப்
பால்வெண்மைத் திங்கள் ஓர்நாள் பாரில்என் மடியில் வந்தால்
போலதாம் கனவும் கூறிப் பொருள்கேட்டு வருக” என்றார். 62
வழி நடப்பதை எல்லாம் கண்டுவந்துசொல்
போகையில் நடக்கும் நன்மை, பொய்யர்கள் செய்யும் தீமை
வாகையில் வல்லோர் செய்யும் வகைவகைப்புதுமை எல்லாம்
நீகையாய் நிழலாய் ஆகி நெடிதுற அறிந்து சொல்வாய்
ஆகையால் உன்னைத் தேர்ந்தேன் அண்ணலார்க்கு” என்றார் அம்மை; 63
|