5. புதுமைகள் தொடங்கிய படலம்
நீரை வரவழைத்தது
அசு என்பவனைத் தொடர்ந்து வணிகர் போயினர்
நேசம் உடைய நபிஅண்ணல் நெருங்கி வந்த வணிகருடன்
பேசும் புகழ் கொள் சாம்நகரின் பெரிய சாலை வழியாக
“ஆசு” என்போன் ஒட்டகமேல் அமர அவனைத் தொடர்ந்தார்கள்
வீசு காற்றின் புழுதியினால் விண்ணும் மண்ணும் புரியவில்லை; 1
செபுறயீல் அனுப்பிய பெண் ஒட்டகம்
வானத் தலைவர் செபுறயீல் வானை விட்டுக் கீழ்வந்து
போன முதல்ஆண் ஒட்டகமோ புறமாய் இருக்க நேர்எதிரில்
காணும் படிபெண் ஒட்டகத்தைக் காட்டிச் செல்ல வைத்ததனால்
ஆணோ பெண்ணை யேநோக்கி அறிவை இழந்து சென்றதுவே! 2
பாதை மறைந்து விட்டது
கொஞ்சம் தொலைவே போனவுடன் குறுக்கும் நெடுக்கும் புரியவில்லை
அஞ்சும் படியாய்ப் பாதைஎலாம் அவர்கள் கண்முன் தெரியவில்லை
நெஞ்சு கலங்கித் துடித்தவர்கள் நேர்செல் வழியை அறியாமல்
மிஞ்சும் துன்பம் கொண்டவராய் மேலும் நடந்து களைத்தார்கள். 3
வணிகர்கள் கலங்கினர்
சாம்நகரத்தைக் காண்போமோ? சாகும் நகரம் காண்போமோ?
போம்நம் வழியே புரியாமல் பொல்லாக் காட்டுள் போகின்றோம்;
தாம்புக் கயிறும் இம்மணலில் தவித்துச் சுருண்டு போய்விடுமே;
நாம்முன்வந்து கெட்டோமே; நம்பிக் கையால் அழிந்தோமே; 4
|