ஐயோ நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோமே!
“பக்கம் எல்லாம் பாலை மணல் பருகத் தண்ணீர் சொட்டுமிலை;
அக்கம் பக்கம் எத்திசையும் அருகில் பச்சை காணவிலை
மக்கா விலேநாம் இருந்தாலும் மக்களோடு வாழ்ந்திருப்போம்;
சிக்கல் வழியே வந்ததனால் செத்தோம் செத்தோம்”என்றழுதார். 5
பொய்ச் சொல்லை நம்பி ஏமாந்தோமே!
நேராய் நடந்தால் வழி யில்லை நின்றால் மெய்மேல் மண்மூடும்
நீராய்த் தோன்றும் இடம் சென்றால் நீரே இல்லை கானல்நீர்;
தீராத் தொல்லை அடையத்தாம் தேயம் நீங்கி வந்தோமோ?
ஆரா ரோசொல் பொய்யைமெய் ஆக நம்பி வந்தோமே; 6
நம் உறவுமக்கள் காத்திருப்பார்களே
கொள்ளை கொள்ளை யாய்ப்பொருளைக் கொண்டு வருவோம் என்றேதான்
சொல்லை நம்பி நம்மக்கள் சுற்றம் ஆங்கே காத்திருப்பார்
கல்லை முள்ளைத் தானிங்கே கண்டு நொந்து நடக்கின்றோம்
எல்லை இன்றித் தவிக்கின்றோம் எங்கே சென்று விழுவோமோ? 7
எல்லாப் பிழையும் இந்த முகம்மதுவால் வந்ததே!
வணிகர் எல்லாம் இதுபேசி வாடி உரைக்க, அபூசகுலோ
தணிவாய்ச் சொல்வான் போல்வந்து தவிக்கும்,“வணிகப் பெரியோரே!
துணிவாய் ஈங்கே வந்தவர்நாம் தொல்லைப் படுவதெல்லாம்இப்
பிணிவாய்ப்பட்ட முகம்மதுவின் பிழையால் வந்த நிலை” என்றான். 8
பூனையை மடியில் கட்டி வந்தால் போல் வந்தோம்
பூனை மடியில் கொண்டால் போல் பொய்யன் தன்னை அழைத்து வந்தோம்
வானைக்கூடக் கடந்திடலாம் வாய்மை இல்லான் இலையானால்
தேனைப் போலப் பேசுமிவன் தீய சொல்லை நம்பிவந்தோம்
பானை தனையே ஆனை எனப் பகர்ந்தால் கூட நம்பிடுவோம். 9
|