பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்67


பாம்பை வீழ்த்தியது

வெய்யோன் சிலிர்த்து எழுந்தான்

வெய்யோன் வருத்தும் பாலையினில் வேட்கை தீர நீர்தந்த
ஐயன் தம்மைச் சூழ்ந்தவர்கள் அரிய கருத்துக் கேட்டவராய்
மெய்யன் புடனே சென்றார்கள் மேலைத் திசையில் மறைந்து பின்னர்ச்
செய்ய ஒளிசெய் வெய்யவனும் சிலிர்த்துக் கீழ்வான் எழுந்தனனே! 16

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மணம் பூசிச் சென்றனர்

முல்லைப் பூவின் மணம்கொண்டு முன்னே போனார் சிலபேர்கள்;்
மல்லி கையின் மணத்தோடு மகிழ்ந்து நடந்தார் சில பேர்கள்;
அல்லிப் பூவின் மணம் பூசி ஆங்கே சிலபேர் நடந்தார்கள்;
வெள்ளைத் தாமரை மணத்தால் விரும்பிச் சென்றார் சிலபேர்கள்; 17

பூஞ்சோலை போவது போன்று இருந்தது

புனுகு பூசிச் சென்றவர்கள் புறத்தில் நடந்து போனார்கள்;
அணுகிச் சென்றோர் மருக்கொழுந்தின் அரிய மணத்தால் சென்றார்கள்;
மனத்தைக் கவரும் கத்தூரி மணமே வீசும் முகம்மதுவின்
இனத்தார் போகப் பூஞ்சோலை இசைந்து போதல் போன்றாரே! 18

நீர் வேட்கையால் வருந்தினர்

ஒன்றி எல்லாம் போனார்கள் “உறுவா” ஆற்றங் கரையினிலே
சென்ற பேர்க்கு நீர்வேட்கை தீரச் சிலபேர் குடித்தார்கள்
என்ற போதும் சிலர்க்கோநீர் இல்லா தாக நபிகண்டு
நன்றே வல்லான் நலமெண்ணி நயந்தே அருளக் கேட்டார்கள். 19

ஆற்றில் வெள்ளம் பொங்கியது

கேட்ட உடனே அவ்வாற்றில் கிளர்ந்து வெள்ளம் பொங்கியதே;
கூட்டம் எல்லாம் குடித்தாலும் குறையா நீரும் பொங்கியதே;
ஆட்ட பாட்டம் எலாம் செய்தே அன்பர் எல்லாம் முகம்மதுமேல்
நாட்டம் கொண்டு நடந்தார்கள் நல்லோர் உள்ளம் நிறைந்திடவே; 20