பக்கம் எண் :

68துரை-மாலிறையன்

வழியில் ஒருவன் பதறிக் கொண்டு வந்தான்

மேலும் அவர்கள் நடக்கையிலே மிகுந்த தொலைவு சென்றவுடன்
காலும் கையும் நடுக்கமுறக் கல்லும் முள்ளும் பார்க்காமல்
தோலில் வேர்வை சிந்திவரத்தொடையில் குதிக்கால் படுமாறு
வாலில் லாத குரங்கைப் போல் வந்தான் நடுக்கம் மிகுந்தவனே! 21

“எதைப் பார்த்தாய் சொல்லு?” என்றார்

ஐயோ! ஐயா! இதுபோல அடியேன் எங்கும் கண்டதில்லை
மெய்யே ஐயா விழியாலே மேவி இதுபோல் பார்த்ததிலை
ஐயோ என்றே அலறிவந்த அவனைப் பார்த்து மற்றவர்கள்
“வெய்ய வாகக் கண்டதைநீ விளம்பி”டென்று கேட்டாரே! 22

பெரிய பாம்பு ஒன்று உள்ளது ஐயா!

அஞ்சா தேகும் வணிகர்களே! ஆங்கே கொஞ்சம் தொலைவாக
அஞ்சத் தக்க காடுண்டே அந்தக் காட்டின் ஒருமலையில்
நஞ்சே உருவாய்ப் பெரும்பாம்பு நடுக்கம் தந்து வாழ்கிறது;
கொஞ்சம் போனால் இங்குவரும் குறுக்கே நீங்கள் போகாதீர்; 23

அப்பாம்பு மூச்சு விட்டால் போதும்

மூச்சு விட்டால் அதன்முன்னே முழுதும் எல்லாம் பறந்துவிடும்
பீச்சி விட்டால் நஞ்செல்லாம் பெருகி ஓடும்; எண்டிசையும்
பேச்சில் ஒன்றும் பயனில்லை பெரிய பாம்பு வருமென்றே
மூச்சில்லாமல் அச்சத்தால் முன்னே விழுந்தான் அந்நல்லோன்; 24

நாம் திரும்பி விடுவோம் என்றனர் வணிகர்கள்

நல்லோன் நடுங்கி விழுந்தவுடன் நாடிச் செல்ல அஞ்சியவர்
செல்லும் போதில் அதுவந்தால் செல்லாதேநம் வீரமெலாம்
அல்லும் பகலும் முயன்றேநாம் அரிய செல்வம் சேர்த்தோமே;
பல்லில் நஞ்சே உளஅந்தப் பாம்பிற்கா நாம் வாழ்ந்திருந்தோம்? 25