பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்69


பாம்புக்கு இரையாகவா இங்கு வந்தோம்?

குதிரை தனையும் விழுங்கிடுமாம்; கொடுங்களிற்றையும் சாப்பிடுமாம்;
எதிரில் வந்த ஒட்டகத்தை எறும்பே போல எண்ணிடுமாம்
புதிர்போல் அந்தப் பாம்புசெயல் புதுமை யாகத் தோன்றிடுதே
இதற்கென் செய்வோம்? என்றவர்கள் எதிரும் புதிரும் நின்றதிர்ந்தார்; 26

முகம்மது ஒருமுழங்கை அளவு ஈர்க்கினை எடுத்தார்

வந்த பாம்பின் வலிமை யினை வள்ளல் பெருமான் முன்னறிந்து
சொந்த மானோர் அஞ்சுகிற சோர்வைப் போக்க எண்ணியவர்
அந்த இடத்தில் இருந்திடும் ஓர் அங்கை முழமே அளவினில்ஓர்
சிந்திக் கிடந்த ஈர்க்கதனைச் செம்மல் கையால் எடுத்தாரே; 27

“தொலைந்து போ பாம்பே” என்றார்

துரும்பை எடுத்துப் பாம்பின்மேல் “தொலைபோ” என்று போட்டார்கள்
பெரும்பாம் பந்தத் துரும்பாலே பிய்ந்து விழுந்து துண்டாகித்
திரும்பக் கூட முடியாமல் தீக்குள் பட்டால் போல் வெந்து
துரும்பாய் ஆகி மாண்டதுவே தூயோர் துன்பம் நீங்கிடவே! 28

இவரே அரியவர்!

பாகார் மொழியார் இது செய்யப் பார்த்து நின்ற வணிகர்கள்
மீகா மன்போல் நமக்குள்ளார் மேவும் துன்பம் நீக்கிடுவார்
ஆ!ஆ! இவரே அரியவராம் அஞ்சாவீரப் பெரியவரே
ஆகாச் செயலும் செய்வர்என அடியை ஒட்டி நடந்தார்கள்; 29