பக்கம் எண் :

70துரை-மாலிறையன்

ஆற்றைக் கடந்தது

வாழ்த்திக் கொண்டே அனைவரும் போனார்கள்

பாம்பைத் துரும்பால் எறிந்தவுடன் பக்கம்நின்ற வணிகரெலாம்
“காம்பைக் கிள்ளிப் போட்டாலும் கத்தி போலாம்” எனக்கூறிப்
பூம்பொற் பாதப் புண்ணியரின் புகழை ஏத்திப் பாராட்டி
ஆம்பல் போலப் போனார்கள் அருந்தாமரையாம் நபி பின்னே! 30

ஆழமான கரை புரண்டு ஓடியது

பகற்போ தெல்லாம் நடந்தவர்கள் பார்க்குமாறு ஓர் பேராறுஅங்(கு)
அகலம் ஆழம் கொண்டதுவாய் அரிய மலைக்கோர் அகழியைப்போல்
புகைபோல் தண்ணீர்த் திவலையினைப் புரட்டிச் சிதறிச் சென்றதுவே
அகமே மகிழ்ந்த அன்னவர்கள் ஆற்றின் வழியே சென்றார்கள். 31

இருள் சூழ்ந்தது

வானில் இருட்டுப் பரவியது; வண்ணக் கதிரும் பதுங்கியது;
கானில் பறந்த பறவைஎலாம் கட்டி வைத்த கூடுகளில்
மேனி ஒடுங்கி அமர்ந்துவிட மின்னி மின்னி மின்மினிகள்
வானின் விண்மீன் போல்எங்கும் மரத்தைச் சூழ்ந்து கொண்டனவே! 32

அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்

தன்னே ரில்லாத் தனிஒருவன் தலைவன் தூதர் நபிபெருமான்
முன்னே வணிகர் இருள்தன்னில் மூழ்கி உறங்கும் வேளையிலே
விண்ணோர் தலைவர் செபுறயீல் விளக்கமாகி ஒருகனவில்
மன்னர் நபியார் மனம்கொள்ள மலர்ந்து தோன்றி அறிவித்தார். 33

கனவில் செபுறயீல் தோன்றினார்

“உறங்குகின்ற நல்லோரே! ஓடும் ஆற்றில் மிகுவெள்ளம்
நிரம்பி ஓடப் போகிறது நிலைக்க இயலா(து) உங்களினால்
மரங்கள் கூடப் பெயர்ந்தோடும் மறந்து விடாதீர்; கண்விழித்துப்
புறம்போய் விடுங்கள்” எனக்கூறிப் புனிதர் மறைந்துபோய் விட்டார். 34

வெள்ளப் பெருக்கு வரப்போகிறது

வானோர் தந்த கனவுரையால் வரப்போம் தீமை உணர்ந்தநபி
ஏனையோர்கள் ஆழ்ந்துறங்கும் இடத்தில் சென்று, “நண்பர்களே!
கானில் ஓடும் இவ்வாற்றின் கரையை மீறி ஓர்வெள்ளம்
தானே வரவே போகிறது தயங்க வேண்டா உடன்எழுவீர்! 35