பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்71


அனைவரும் எழுந்திருங்கள்

சூழும் வெள்ளம் வருவதற்குள் சுறுக்காய்ச் சென்றால் தப்பிடலாம்
ஏழுகடலும் சூழ்வது போல் இங்கே வருமே பெருவெள்ளம்
வாழும் எண்ணம் உள்ளவர் நாம் வருக வருக” எனக் கூறத்
தோழர் வணிகர் எல்லாரும் தூக்கம் விட்டுத் துடித்தெழுந்தார்; 36

மலைஉச்சிக்கு ஏறித்தப்பித்தார்

வள்ளல் பெருமான் சொன்னஉரை வாய்மைஆகும் படியாக
வெள்ளம் வந்து மேலோங்கி விண்ணை நோக்கிப் பொங்கியது;
கள்ளம் இல்லா முகம்மதுவின் கருத்தைக் கேட்டோர் எல்லாரும்
உள்ள ஆங்கோர் மலைக்குன்றின் உச்சிக் கேறித் தப்பித்தார்; 37

வள்ளம் நுரைத்துச் சுழித்துச் சென்றது

பள்ளம் மேடு தெரியவில்லை; பாதை எதுவும் புரியவில்லை;
துள்ளும் மீனும் வெள்ளத்தின் சுழிக்குள் மாட்டிக் கலக்கமுறும்
புள்ளும் விலங்கும் கூட அதில் புதைந்து போகும் படிஅந்த
வெள்ளம் நுரைத்துச் சுழி கொண்டு விரைந்து படர்ந்து சென்றதுவே! 38

மரங்களை அடித்துச் சென்றது

அடித்துச் செல்லும் ஆலமரம் அதனைக் காக்க அரசமரம்
பிடிக்கச் செல்லு வதுபோலப் பின்னே செல்லும்; இதைக்கண்டு
துடிக்கத் துடிக்கச் செல்வதுபோல் தொடர்ந்து போகும் ஈச்சமரம்
இடித்துக் கொண்டு செலும் இவற்றை இடையில் தடுக்கும் பாலைமரம்; 39

விலங்குக் கூட்டம் அடித்துச் செல்லப்பட்டன

வானில் இருப்பான் கடவுள்என வணங்கிப்போகும் நிலையதுபோல்
ஆனைக்கூட்டம் மல்லாந்தே அடித்துப்போகும் வெள்ளத்தில்
தோணிபோல ஒட்டகங்கள் தொடர்ந்து போகும்; மானின்முன்
கூனிக் குறுகிச் செல்கின்ற கோழை போலப் புலிபோகும்! 40

வெள்ளம் எங்கும் பரவியது!

குடிசை போகும் கூரைமேல் குந்தி இருக்கும் ஒருசேவல்
முடிசெய் மன்னர் போல்போகும் மூழ்கப் போதல் அறியாமல்;
பொடிசெய் வதுபோல் வெள்ளம்தான் புரட்டிப் போகும் குன்றத்தை;
இடிசெய் வானமுகில் போல எங்கும் வெள்ளம் பரவிடுமே!