பலநாள்கள் வெள்ளம் வடியவில்லை
ஒருநாள் இருநாள் முந்நாள்கள் ஒட்டி ஒட்டி இருந்தாலும்
ஒருநாள் கூட வெள்ளத்தின் ஓட்டம் சிறிதும் குறையவில்லை
வருநாள் இறுதி நாள்தானோ வாழ்க்கை இனும்ஓர் நாள்தானோ?
பெருநாள் வாழ்வென்றிருந்தோமே பேய்வெள்ளத்தால்
அழிந்தோமே; 42
முகம்மதுவே!
எங்களைக் காப்பாற்றுங்கள்
“இறைவன் காப்பான்” எனக்கூறி இவரோ நம்மை ஆற்றுகின்றார்;
நிறையும் ஆற்றின் நீரோட்டம் நெருங்கி வானை முட்டுமெனும்
முறையில் மேலும் பெருகுவதோ முடிவே வரும்போல் தெரிகிறதே;
பிறைபோல் நெற்றி முகம்மதுவே பேணிக்காப்பீர் எமை”
என்றார். 43
நபி பெருமான் இறைவனிடம்
முறையிட்டார்
மோதிப் பெருகும் வெள்ளமதோ முன்னே வடியு மாறில்லை;
நீதி நிறைந்த தோழர்களின் நெஞ்சின் அச்சம்
தீரவில்லை;
ஆதி இறைவன் அருளுக்கோஆன வரைக்கும் குறைவில்லை;
தூதாய் வந்த நபியாரோ துன்பம் தீர்க்க முறையிட்டார். 44
மீண்டும் செபுறயீல் கனவில்
தோன்றினார்
அந்நாள் இரவும் அண்ணலவர் ஆழ்ந்து தூங்கும் பொழுதினிலே
எந்நா ளும்போல் கனவொன்றில் எழில்வான் நல்லார் செபுறயீல்
இந்நாள் தோன்றி “நல்லோரே இரவு நீங்கிச் சூரியனும்
முன்னால் வருவான் அந்நேரம் மொழிதல் போலச்
செய்யுங்கள்; 45
புள்ளிமான் வரும் அதன்வழி
செல்லுங்கள்
புள்ளிமான்ஒன்று அங்குவரும் புனலில் கூடத் துள்ளிவரும்
எள்ளி அதனை விரட்டாமல் எளிதாய்த் தப்ப வழி காண்பீர்
வெள்ளம் போகும் ஆறதனில் விரைந்து சென்று வழிகாட்டும்
நல்ல முறையில் செல்க” என நவின்ற வானோர்
போய்விட்டார்; 46
அவ்வாறே மான்
வந்தது
பொய்யா வானோர் சொன்னதுபோல் வெய்யோன் படர்ந்துவர
ஒய்யென் றோர்மான் விளையாடி ஓடி யாங்கு வந்தவுடன்
துய்ய மேலோர் முகம்மதுதாம் தொடர்ந்து பார்த்துப் பின்வரவே
உய்யும் வணிகர் எல்லாரும் உவகை கொண்டு பார்த்தனரே; 47
|