என் பின்னால் வருக
“நீரில் இறங்கிப் போகின்றேன் நீரும் என்றன் பின்வருக
நேரில் இறைவன் அருள்காக்கும் நீரை எண்ணிக் கலங்காதீர்
நீரில்லாமல் நான் மட்டும் நீரில் தப்பிச் செல்வேனோ?
நீரே என்றன் அன்புளத்தில் நிறைந்துள்ளீர்கள்”
எனச்சொன்னார். 48
அனைவரும்
அவர் பின்னர்ப் போனார்
மானும்
மணிநீர் வெள்ளத்தில் வழியைக் கொண்டு செலக்கண்டு
மானுடத்தைக் காக்கவந்தோர் மாறாது அந்த வழிசென்றார்
போன மற்றைத் தோழர்களும் புதுமை நெறியைக் கண்டவர்போல்
தீன்நன் னெறியே சொலவந்தார் தேர்ந்த நெறியே சென்றார்கள். 49
இவரைப் பழித்தோமே!
என்னே! என்னே! புதுமை இஃதே! எல்லாம் நலம்பெற் றுய்ந்தோமே!
கொன்னே பெருமான் இவர்மீதில் குற்றம் சொல்லிப் பழித்தோமே
மன்னே! மக்கா மாமணியே! மகம்மதென்னும் பேரொளியே!
இன்னே யாங்கள் எல்லாரும் இனியார் உங்கள் வழி” என்றார். 50
மான் சென்ற வழியே சிறந்த வழி
ஆற்றில் எல்லாம் வெள்ளம்தான் அடங்க வில்லை என்றாலும்
சாற்றும் மான்செல் இடமெல்லாம் சற்றே ஆழம் கண்டார்கள்
ஊற்றும் இல்லை வெள்ளத்தின் ஓட்டப் பெருக்கும் ஆங்கில்லை
நாற்றங்காலின் தண்ணீர்போல் நான்குதிசையும் கண்டார்கள். 51
நம்பிச் செல்லாதார் மாண்டனர்
அண்ணல் சென்ற வழிநாடி ஆர்சென்றாரோ அவரெல்லாம்
பின்னால் சென்று தப்பித்தார் பேணா ஒருவன் தருக்குற்றே
என்னால் உன்பின் வருதற்கே இயலாதென்றே வேற்றுநெறி
தன்னால் சென்றான் அவ்வெளியன் தானே அமிழ்ந்து மாண்டானே! 52
மருந்தூட்டும் தாய் போன்றவர்
தேனைக் காட்டிக் குழந்தைக்குச் செம்மருந்தூட்டன்னையைப் போல்
மானைக்காட்டித் தீன் இசுலாம் மாண்பைக் காட்டும் நோக்கத்தார்
வானைக் காட்டும் விருப்பமுடன் வாய்த்த புதுமை பலகாட்டிக்
கூனை நிமிர்த்தும் குறிக்கோளில் கோமான்சிறந்து வென்றாரே! 53
|