பக்கம் எண் :

74துரை-மாலிறையன்

புலி உரையாடியது

காட்டு வழியே சென்றார்

வெள்ளம் விட்டு வெளிவந்த விழைநல் நெறியார் நபிபெருமான்
உள்ளம் மகிழ்ந்த வணிகருடன் ஒன்றி நடந்து செல்கையிலே
முள்ளம்பன்றி முயல்கூட்டம் முதுகில் வரிகொள் அணில்ஓட்டம்
புள்ளும் விலங்கு வகையினமும் பொலியக் கண்டு மகிழ்ந்தார்கள். 54

இவ்வழியே போகாதீர்கள்

நல்லோர் வருகை எதிர்கண்ட நாட்டுப்புறத்தான் ஆங்கொருவன்
பொல்லார் தம்மைக் கண்டொருவர் புறத்தே ஓடும் செயல்போன்று
வல்லோர் முன்னே நடுக்கமுற வந்தான் நொந்தான் “ஐயாவே!
எல்லோர்க்கும்தான் சொல்கின்றேன் இதற்கு மேலே செல்லாதீர்; 55

நல்லகாடுதான்

முல்லை மலரும் காடேதான் முயலும் மானும் வாழும்தான்
எல்லை இல்லா மரக்கூட்டம் எங்கும் அடர்த்தி இருளேதான்
பல்லைக் காட்டிக் குரங்குகளும் பச்சைமரத்தின் கிளையாட்டும்
புல்லை மேய்ந்த காட்டெருமை பொறுமையோடும் அசைபோடும்; 56

புலி ஒன்று உள்ளது

இதுபோல் காடே இருக்குமென எவரும் சொல்வார் ஐயாவே!
அதுபோல் இந்தக் காடில்லை ஆர்தான் உள்ளே செல்வாரோ?
பொதுவாய்ப் புலியும் இருக்குந்தான் பொல்லாப் புலிஒன்று அங்குண்டு
மெதுவாய் நடக்கும் பழக்கமெலாம் மேனி பெருத்த அதற்கில்லை; 57

கொடிய தோற்றம் உடைய வேங்கை

வரிகொள் வேங்கை என்பதனை வாயால் எளிதாய்ச் சொல்லிடலாம்
எரிகொள் ளிப்போல் இருகண்கள் எதற்கும் அஞ்சா உறுமல்கள்
வரிசை யாகக் கருங்கோடும் வளைந்து நிமிர்ந்த உடல்வாகும்
பெரிய காலின் கூர்நகமும் பின்னால் நீண்ட வாள்வளைவும்; 58

சொல்லவே அஞ்சுகிறேன்

வெள்ளைப் பல்லின் செந்நிறமும் வெறிகொள் இரத்த வாய்நிறமும்
முள்ளைப் போல இருக்கின்ற முகத்து மீசை கொடுமையையும்
சொல்லச் சொல்ல நடுக்கந்தான் சொல்லா திருக்க இயலவிலை
உள்ளே அதுதான் இருக்குமெனில் ஓசை இன்றிச் சென்றிடுங்கள்; 59