பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்75


வேங்கை கண்ணில் படாமல் போங்கள்

வழியில் எங்கும் எலும்புகளும் வறண்டு போன சதைத்துண்டும்
ஒழியா முடைத்தீ நாற்றந்தான் ஓங்குகின்ற சூழ்நிலையும்
விழியால் கண்டு விலகிடுங்கள் வேங்கை கண்ணில் சிக்காமல்
வழியே செல்க” எனக்கூறி வருந்தி வருந்தி உரைத்தானே. 60

முகம்மது முன்னால் போனார்

எல்லாம் கேட்ட நபிபெருமான் இயம்பி நடுங்கும் அவனிடத்தில்
பொல்லாப் புலியின் இருப்பிடத்தைப் புகலச் சொல்லி அவ்வழியே
எல்லா ரும்பின் னால்போக ஏந்தல் முன்னால் நடந்தார்கள்
வல்ல வேங்கை முகம்மதுவின் வருகை தன்னை அறிந்ததுவே! 61

புலி சலாம் உரைத்து வணங்கியது

வாலைக் குழைத்தே உடல்சுருக்கி வலிய புலிபோல் இல்லாமல்
காலை ஊன்றிப் பூனையைப்போல் கழுத்தை நீட்டி விளையாடிப்
பாலைக் குடிக்கும் கன்றைப் போல் பக்கம் வந்து முகம்மதுவின்
காலில் வீழ்ந்து சலாமுரைத்துக் கண்ணால் பார்த்துப் பேசியதே; 62

வேங்கையைத் தடவிக் கொடுத்தார்

“கண்முன் வந்த பெரியோரே! கண்டதெல்லாம் என் பேறே
மண்முன் வந்த முகம்மதுவே! மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன்” எனக்கூறி
விண்முன் கண்ட நிலை போன்று விளம்பி நின்ற வேங்கையினை
வண்கை நபியார் முன்கையால் வகையாய்த் தடவிக் கொடுத்தனரே! 63

புலியே! தீமை செய்யாதே!

“புலியே! புலியே! புகல்வது கேள்! பொல்லாச் செயலைச் செய்யாதே!
வெளியே போய்நீ வாழ்ந்திடுவாய் வீணில் தீமை செய்யாதே!
ஒளியார் இதனைச் சொன்னவுடன் ஓசைஇன்றி அப்புலிதான்
மலியும் பசுமைக் காட்டுக்குள் மகிழ்ந்து துள்ளி ஓடியதே. 64

அன்பே வெல்லும்

கொடிய புலியும் அன்பென்னும் கூண்டுள் அடங்கும் முறைகாட்டி
நெடிய பெருமான் இந்நிகழ்ச்சி நேரில் அமைத்துத் தந்தார்கள்
அடியும் குத்தும் வன்முறையும் அழிவே காட்டும், அன்புரையோ
படியா தவரும் படிந்து வரப் பண்ணும் எனவே இதைச் செய்தார்; 65