|
வேறு வழியில் செல்வோம்
தலையினைத் தூக்கித் தான்நிமிர்ந் திடுமேல்
தலையினை மலைஎனச் சொல்வோம்
மலையினைச் சுற்றி ஊர்ந்துடன் வருமேல்
மதர்த்தெழு வெள்ளமே என்போம்
குலைஎலாம் நடுங்கும் கொடுமைசெய் பாம்பின்
குறுக்கிலே சென்று மாட்டாமல்
அலையலாம் தேடி அயல்வழி நாடி
அமைதியாய்க் கடக்கலாம்” என்றான்; 69
மற்றவரும் கூறினர்
கொஞ்சமே சொன்னான் குலைநடுங் கியவர்
கோமக னார்தமைப் பார்த்து
நஞ்சமே எனினும் நாம்பொறுத் திடலாம்
நடுக்குமே உடலெலாம் அதனால்
அஞ்சலே இன்றி அயல்வழி செல்வோம்
அமைதியாய்” என்றவர் முன்னே
மிஞ்சவே இறைவன் மிகுநலம் உற்றார்
மிகுமகிழ் வெய்தவே சொன்னார். 70
அஞ்சாதீர்கள்; என்னைத் தொடர்வீர்
“அச்சமேன்? என்னை அனைவரும் தொடர்க
அமைதியாய்க் கொண்டுபோய்ச் சேர்ப்பேன்
உச்சிமேல் இறைவன் உறுதுணை உண்டே
உளம்தடு மாறிடல் வேண்டா;
குச்சிபோல் நினைத்தக் கொடியபாம் பினைநாம்
குறுகுவோம்” என்றனர் அக்கால்
அச்சனின் செவிக்குள் அரியவான் உரையே
அளித்திட அமைந்தவர் கேட்டார்; 71
|