பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்81


பெருமானை அழைத்து வா

பணியாள் தன்பால், உடனே போய்ப் பரிவோ(டு) அந்த நல்லவரைத்
தணியா விருப்பம் கொண்டெங்கள் தலைவர் உள்ளார்; உமக்கெல்லாம்
அணிசெய் விருந்தை அளித்திடவே அழைக்கின் றாரென் றறிவித்துப்
பணிவாய் அழைத்து வருகென்றார் பணியாள் அழைக்கப் போனானே. 6

இயற்கைகள் மகிழ்ந்தன

மரங்கள் எல்லாம் வரவேற்று மலர்கள் பொழிய மலரெல்லாம்
நெருங்கி வந்தார் நபிஎன்றே நெகிழ்தேன் பனிநீர் தூவினவே
பெருங்கூட் டத்துப் பறவைகளும் பெருமான் தம்மை வரவேற்று
வரங்கள் கேட்கும் நிலைபோல வரிசையாகக் குந்தினவே; 7

விலங்குகள் மகிழ்ந்தன

மானும் கறவை மாடுகளும் மகிழ்ந்து கனைக்கும் குதிரைகளும்
காணும் கழுதை எருமைகளும் கணக்கில்லாத விலங்குகளும்
வானும் போற்றும் வள்ளலொடும் வணிகர் வருகை கண்டவுடன்
வேணும் வேணும் என்பனபோல் விலங்கேஎனினும் மகிழ்ந்தனவே; 8

முகம்மது காவலாக இருக்கட்டும்!

ஆங்கே இருந்த அபூசகுலோ, அனைவ ருக்கும் விருந்துண்டு
தீங்கே இன்றிப் பொருள்கள்எலாம் திருடர் கொள்ளா திருந்திடவே
ஈங்கே ஒருவர் இருக்கட்டும் ஏற்ற காவல் முகம்மதுவே
போங்கள்” என்று மற்றவரைப் போக்கி விட்டான் தீயவனே; 9

முகம்மது எங்கே?

செம்மல் காவல் செய்திருக்கச் சென்றார் மற்றோர் விருந்திற்கே;
மம்மர் இல்லா இசுறாவோ “ மகம்மதெங்கே?” எனக் கேட்டார்;
“அம்மாண் புடையோர் காவல்செய்து ஆங்கேஉள்ளார்” எனச்சொல்லச்
செம்மாண் புடைய இசுறாவின் சினங்கண்டு ஆரிதென்பவனோ; 10

முகம்மது புறப்பட்டு வந்தார்

ஓடிச்சென்று முகம்மதுவின் உள்ளம் இரங்கத் தெரிவித்து
“நாடி வருக” எனச் சொன்னான்; நலிந்தோர் துன்பம் போக்குகிற
பீடு மிக்கார் உடனெழுந்து பெரியோன் இசுறா தான்வைக்கும்
கேடில் விருந்தில் கலந்திடவே கேணி அருகில் அமர்ந்தார்கள். 11