பட்டமரம் தளிர்த்தது
பன்னாள் தூர்ந்த கேணியது பனிநீர் அதனுள் ஊறியதே
தன்னால் காய்ந்த ஈச்சமரம் தளிர்த்துத் தழைத்துச் சிறந்ததுவே
அண்ணல் கால்மண் தீண்டாமல் ஆங்கே சென்று நின்றவுடன்
கன்னல் கண்டார் போல்ஆங்கே களித்தார் முதியோர் இசுறாவே! 12
நபி ஈசா அந்நாள் வந்தார்
“பொன்னார் மேனி முகம்மதுவே! புகல்வேன் கேட்பீர் அந்நாளில்
இன்னா செய்தார் தமக்கும்நல் இனிமை அன்பு செய்க எனச்
சொன்னார் அன்றோ நபிஈசா தூயர் ஈங்கே அவர் வந்தார்
அன்னார் பாதம் அடியேன் நான் அன்பு கொண்டே வணங்கியபின்; 13
வேறு நபி வருவாரோ?
“வையம் கனிய வந்தீரே! வந்த உம்போல் வேறு நபி
ஐயம் நீக்க வருவாரோ? அன்றேல் இனிமேல் வாராரோ?
உய்ய உரைப்பீர்” எனக்கேட்டேன் ஒளியார் உடனே எனைநோக்கி
“மையார் வான முகிலைப் போல் வாரி வழங்கும் இறைஆற்றல்; 14
இறுதி நபி தோன்றுவார்
ஆதம் நபியே முதலானார் அதற்குப் பின்னே பலநபிகள்
ஏதம் நீக்க வருவார்கள் இனிய நெறியே சொல்வார்கள்
மாத வம்செய் மக்காவில் மணிஅப் துல்லா ஆமீனா
ஆதர வாலே இறுதிநபி அரியோ ராகத் தோன்றிடுவார்; 15
அவர் வருகையினால் உலகம் செழிக்கும்
“பேரும் முகம்மதென்றாகும் பேறும் வீடும் பெருகிவரும்
ஆரும் அவர்சொல் நெறிபோற்றி அரிய கலிமா ஓதிடுவார்
சீரும் சிறப்பும் உருவாகும் செம்மை வாழ்வு நிலையாகும்
பாரும் பாரும்” எனக்கூறிப் பக்கம் இருந்த நபியார்முன்; 16
அவரை நான் காண முடியாதே!
“எந்தக் காலம் தோன்றிடுவார்?” என்று கேட்டேன்; அன்னாரோ
முந்தும் இன்னும் அறுநூறு முழுமை ஆண்டு சென்றால்தான்
வந்து தோன்றி வளம்செய்வார் வள்ளல்” என்றார் அதுகேட்டு
நொந்து சொன்னேன் “அவர்தம்மை நொடியும் காணமுடியாதே” 17
|