|
அந்நாள் வரையில் நீ இருப்பாய்
“அந்நாள் வரையில் இருப்பேனோ ஐயா?” என்று கூறியதும்
செந்நா வாலே நபிஈசா சிறக்கச் சொன்னார். “இசுறாவே!
இந்நாள் நீங்கள் இருப்பதுபோல் இறுதி நபிநாள் இருப்பீர்கள்”
நன்னாள் ஒருநாள், காண்பீர்கள் நல்லார் வருகை” என்றாரே. 18
என் அன்பையும் அவர்க்குச் சொல்க
“வருகை யன்று வறுங்கேணி வளரும்; அங்கே பட்டமரம்
கருகி இருந்த நிலைமாறிக் கண்முன் தளிர்த்துப் பசுமைதரும்;
உருகி நிற்பார் கண்டோர்கள் உணர்ச்சி பொங்கி வாழ்த்துவரே
அருகில் வந்தார்க்கு யான்சொன்ன அன்பைச்சொல்வீர்” எனச் சொன்னார். 19
தங்களைக் கண்டதே போதும்
அந்நாள் தொடங்கி இதுகாறும் ஐய! உம்மை எதிர்நோக்கிப்
பன்னாள் இந்தச் சோலையிலே பதமாய் வாழ்ந்து வருகின்றேன்;
பின்னால் எதுவும் யான்வேண்டேன் பெரியீர்! நும்மைக் கண்டதுவே
பொன்னாள் என்று புகழோர்முன் பொருந்து சலாமும் வைத்ததன்பின்; 20
இனிப்புவி வாழ்க்கை வேண்டாம்
போதும் ஐயா வாழ்நாள்கள் புவியில் வாழும் வாழ்க்கைஇன்னும்
மீதம் இல்லை என்னாவி மேனிவிட்டு வெளியேறும்
ஆதம் வழியின் அரு நபியே! அணியாய் என்றன்உடல்உங்கள்
பாதம் பட்டுப் பொலிந்ததுவே போதும் போதும்” என்றதன்பின்; 21
அனைவருக்கும் இசுறா அறிவுரை கூறினான்
அரிய பெரிய விருந்தொன்றை அனைவ ருக்கும் பரிந்தளித்து
விரியும் ஒளிசூழ் முகம்மதுவின் விழையும் அன்பில் குளித்தானே
உரிய நேரம் வந்ததென உணர்ந்த பெரியோன் இசுறாவும்
அருகில் நின்றோர் தமக்கெல்லாம் அறிவுரைகள் தந்தானே. 22
இசுறா கட்டிலில் படுத்து உயிர்நீத்தான்
உறவோர் கிளையோர் சூழ்ந்திருக்கும் உரிமை உடையோர் எல்லார்க்கும்
அறத்தின் பெருமை உரைத்துப்பின் அமைதியாகி முகம்மதுவின்
வரத்தை அருளும் நெறி வணங்கி வகையாய்க் கட்டில் மேல்படுத்தான்
உரத்தான் உயிரும் ஒளிபெற்றே உரியோன் உலகை நாடியதே! 23
|