பக்கம் எண் :

84துரை-மாலிறையன்

உற்றார் உறவினர் அழுதனர்

உற்றார் எல்லாம் அழுதார்கள் உடையோர் எல்லாம் ஒன்றாகிக்
கற்றான் மேனி அடக்கத்தைக் கடமை உணர்ந்து செய்தார்கள்;
அற்றார் வாழ வந்தவராம் அகம்மதொளியார் தோழருடன்
நற்றேன் பொழியும் சோலைக்குள் நயந்து சென்று தங்கினரே! 24

கள்வரை ஆறு மறித்தது

நபிபெருமான் தோழர்களுடன் புறப்பட்டார்

காலைக் கதிரோன் வெயில் பரப்பிக் கடலின் நீர்மேல் முளைத்தெழுந்தான்;
சோலைக் குள்ளே கண்ணயர்ந்த சுடர்க்கண் நபியார் உடன்வந்த
கோல வணிகர் அனைவரையும் கூட்டிப் போனார் வெம்மையுறு
பாலை குறிஞ்சி முல்லை வரும் பாதை எல்லாம் கடந்தனரே! 25

காட்டைக் கடந்தார்கள்

முல்லை சூழ்ந்த பாலையினில் முதுகு வளைந்த ஒட்டகமும்
புல்லை மேயும் குதிரைகளும் பொறுமை உள்ள கழுதைகளும்
எல்லை யற்று விரிந்தனவாய் எங்கும் மேய்ந்து திரிந்தனவாம்
வல்ல நபியார் வணிகருடன் வழியே நடந்து போனார்கள். 26

இங்குத் திருடர்கள் அதிகம் உண்டு

வழியில் ஒருவன் எதிர்வந்து “வணிகம் புரியச் செல்வோரே!
எழிலாய் இருக்கும் அம்மலையின் இடத்தைச் சுற்றித் திருடர்கள்
விழிமேல் காக்கும் நம் பொருளை வெஃகிப் பறித்துச் செல்வார்கள்
தொழிலாய் இதையே செய்கின்றார் தொடரும் துன்பம்” என்றார்கள். 27

அண்ணல் உரைத்தார்

புதியோன் இவன்தான் புகன்றதெலாம் பொய்யே இல்லை இதைவிடவும்
அதிகத் தொல்லை தருவார்கள் அந்தத் திருடர் என மற்றோர்
முதிய வணிகர் உரைத்தவுடன் முற்றும் மற்றோர் வருத்தமுற
மதியின் முகத்தார் முகம்மதுவோ வணிகர் தம்மைப் பார்த்துரைத்தார். 28

கள்ளர்க்காக அஞ்சாதீர்

“திருடர்க் காக அஞ்சாதீர்! திகைத்து நடுங்கி நடக்காதீர்!
ஒருவன் கூட நம்பொருளை ஒட்டி வருதல் இயலாது”
பெருமான் இதனைக் கூறியதும் பின்னர் உறங்கும் பொழுதினிலே
அருமாண் புடைய கனவொன்றில் அதையே மீண்டும் கண்டார்கள். 29