|
வெள்ளம் ஒன்று உருவாகும் என்று கனவு காணுதல்
“கள்ளர் என்று நடுங்காதீர் காக்க மலையின் நேர்எதிரில்
வெள்ளம் ஒன்று பெருக்கெடுத்து விரைந்திங்(கு)ஆறாய் ஓடிவரும்
பள்ளம் மேடும் உருவாகும் பாதை உமக்கோ எளிதாகும்
உள்ளம் கலங்கா தீர்” என்றே உரைவந் ததுவே ஓர்கனவில். 30
கனவில் கண்டதுபோல் வெள்ளப்பெருக்குத் தோன்றியது
கண்ட கனவை நபி எடுத்துக் காலை வணிகர்க் குரைசெய்யக்
கொண்ட கலக்கம் தீர்ந்திடவே கொடிய காட்டின் நடுவில்ஒரு
மண்டும் வெள்ளப் பேராறு மதர்த்துச் சுழித்துக் கிளம்பியது
கண்டு கண்டு வணிகர்கள் களித்து வாழ்த்தி வியந்தார்கள்; 31
ஒரு கரையில் வணிகர் மற்றொரு கரையில் கள்ளார்
இந்தக் கரையில் வணிகர்கள் இனிதாய் நடந்து சென்றிடவும்
அந்தக் கரையில் திருடர்கள் அங்கலாய்த்து நடந்தார்கள்;
முந்தி எட்டிப் பார்த்தாலும் முகமும் கூடத் தெரியவில்லை;
எந்தப் பக்கம் வணிகர்என எட்டிப் பார்த்தும் புரியவில்லை. 32
கள்ளர் வியந்து மலை உச்சிக்குச் சென்றார்
என்னே! என்னே! ஒரு புதுமை! இவ்வா றீங்கே நடக்கிறதே!
தன்னே ரில்லா வெள்ளமிது தாவி வந்த புதுமையிது;
முன்னே உள்ள மலை யுச்சி முயன்று சென்று காண்பமெனக்
கொன்னே அந்தக் கள்ளர்கள் குன்றின் உச்சி சென்றார்கள். 33
ஏறி நின்றாலும் வெள்ளம் ஏறி மறைத்தது
ஏறி நின்ற உச்சிவரை ஏறி வெள்ளம் மறைத்ததுவே
நீரில் இந்தப் புதுமைஎலாம் நிகழ்தல் கண்டு திருடர்கள்
மாறி மாறி விழித்தார்கள் மனத்தால் அஞ்சித் தவித்தார்கள்;
ஏறி நின்ற திருடர்கள் ஏமாந் தேதான் போனார்கள்; 34
வணிகர்கள் முகம்மதுவைப் போற்றினர்
வணிகர் எல்லாம் முகம்மதுவின் வரத்தின் பெருமை உணர்ந்தவுடன்
துணிவாய் மேலே சென்றார்கள் “தூயர் நபியே!” என்றார்கள்
பணிந்து போற்றிப் புகழ்ந்தார்கள் பரமன் தூதர் நபி என்றே
கனிந்து சொன்ன வணிகர்களைக் கரவால் பார்த்தான் அபூசகுலே; 35
|