பக்கம் எண் :

86துரை-மாலிறையன்

அபூசகுல் பிதற்றினான்

ஐயோ! ஐயோ! வணிகர்களே! அவன்முன் நீங்கள் ஏமாந்தீர்!
பொய்யே காட்டி மிரட்டுகிறான் புதுமை என்று புரட்டுகிறான்;
பொய்யன் என்றும் முகம்மதுவைப் புரட்டன் என்றும் அபூசகுல்தான்
நையச் சொன்ன சொல்கேட்டு நவின்றார் ஆங்கே அபூபக்கர்; 36

முகம்மது நபி வருந்தாமல் தோழருடன் சென்றார்

தீயார் சொல்லும் சொல்லெல்லாம் தெளிந்தார் நெஞ்சைச் சுடுவதில்லை
ஈயா பறந்து விண்ணேகி இருளைக் கொடுக்கக் கதிர் மறைக்கும்?
வாய்மை உடையார் நபிபெருமான் வருத்தம் தீர்க” எனக்கூறி
நேய உறவு வணிகரொடு நெருங்கிச் சோலை அடைந்தனரே. 37

சாம் நகர் நோக்கிப் புறப்பட்டனர்

வண்டு சூழும் சோலைக்குள் வணிகர் சூழ்ந்து தங்கியபின்
கொண்டு வந்த மணிவகையின் குவையை ஏந்தி வந்தவர்கள்
கண்டு நிகர்த்த சுவைக் கனிகள் கனியும் ஈச்ச மரம் சூழ்ந்த
பண்டைப் புகழ்கொள் சாம்நகரின் பாதை நோக்கிப் புறப்பட்டார். 38

சாம் நகர வணிகர்களைச் சந்தித்தனர்

ஊரின் உள்ஓர் விடுதிக்குள் ஒளிசேர் நபியார் பெருமானும்
ஆரும் போற்றும் அபூபக்கர் அன்பர் மட்டும் உடனிருக்கச்
சீரும் சிறப்பும் உடையபிற செல்வ வணிகர் ஆங்கிருந்தார்
நேரில் வந்த சாம் நகரார் நெருங்கிக் கேட்டார் வணிகரையே! 39

உங்களோடு வந்துள்ள இவர் யார்?

வானின் நிலவு வந்தது போல் வந்திருக்கும் இவரோடும்
மீனின் நிலைபோல் நீங்களெலாம் மேவி ஈங்கே வந்துள்ளீர்
நான்நீ என்று போட்டி இட்டு நறுமென் மலர்கள் குழுமம்எனத்
தேனீ மொய்க்கும் வகையினிலே தெரியும் இவர்யார்? என்றார்கள் 40

இவரே முகம்மது! வணிகம் செய்ய வந்துள்ளார்

இவர் யார் என்றீர் இவரேதாம் இனிய எங்கள் முகம்மதுவே
தவறில் அப்துல் முத்தலிப்புத் தங்கள் புதல்வர் புதல்வரிவர்
தவமும் கொடையும் தண்ணருளும் தாங்கி வந்தார் பொன்மணிகள்
குவையும் கொண்டு நயமுடனே கூறி வணிகம் செயவந்தார். 41