பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்87


எங்கள் வீட்டுக்கு விருந்துண்ண வருக

இதுபோல் கூறி, இருப்பார்க்குள் இருந்த முதியோர், அண்ணலொடும்
இதயம் பொருந்தி இருந்தவராம் எழில்மை சறாவைக் கண்டுமனம்
பதியக் கட்டித் தழுவியதும் பண்பாய் நோக்கி நம்மில்லில்
புதிய விருந்தாய் வருகவெனப் புகன்று வேண்டி நின்றார்கள். 42

கதீசா அம்மையார் என்னை அனுப்பினார்

குலத்தின் மணியாம் கதீசாநம் குணத்தின் குன்றம் முகம்மதுவின்
நலத்தை எண்ணி அவர்தம்மை நாடி இருக்கப் பணித்திட்டார்
நிலத்தை விட்டே பிரிந்தாலும் நீங்கேன் இவரை எனச்சொன்ன
உளத்தால் உயர்ந்த மைசறாவை உவந்து முதியோர் வாழ்த்தியபின்; 43

ஒருவன் முகம்மதுவினிடம் கூறினான்

பொன்னார் பாத நபியாரின் புகழை எண்ணிப் பணிந்தெழுந்து
நன்னர் பேசி வணிகத்தை நல்ல முறையில் செய்வித்தார்
பின்னர் ஒருவன் முன்வந்தே “பெருமை கொண்ட முகம்மதுவே!
பன்னாள் முயன்றேன் பயனில்லை பணிவேன் ஐயா கேளுங்கள்” 44

தாங்கள் வந்தால் என்பொருள்கள் விற்றுவிடும்

என்பால் உள்ள மணியெல்லாம் ஏனோ இன்னும் விற்கவிலை
அன்பால் தாங்கள் வந்தீரேல் அரிய பொருள்கள் விலையாகும்
என்பால் கூடப் பிறர்க்குரிய ஏந்தல் நீவிர் என்னில்லம்
பண்பால் வருக எனத் தாழ்ந்தான் பற்றுக் கொண்ட உளத்தானே! 45

முகம்மதுவை வணங்கினான்

பணிந்த நல்லோன் வேண்டுதலைப் பரமன் தூதர் நிறைவேற்றிக்
கனிந்த மனத்தார் ஆனவுடன் களித்த மனத்தான் அவ்வணிகன்
அணிந்த பண்பின் மலையன்னார் அரிய பாத மலர்பற்றிக்
குனிந்து விழுந்து கும்பிட்டுக் கொள்கைப் பெருமான் முன்னின்றான். 46

காபிர்கள் கொடுமை செய வந்தனர்

விடுதியில் தங்கி நல்ல விலைபேசி மணிகள் விற்ற
நடுநிலை நபிகள் தம்மை நாடிய காபிர் கூட்டம்
மடுவுளே மூழ்கிக் கொண்டு மலையினைப் பார்ப்பவர்போல்
கொடுமைகள் செய்வ தற்காம் கொள்கையோடு ஆங்கே வந்தார். 47