பக்கம் எண் :

88துரை-மாலிறையன்

வந்தவர் முகம்மதுவின் பெருமையைக் கண்டனர்

வள்ளலைக் கண்ட பேர்கள் வாய்மையைக் கண்டார்; அன்பின்
துள்ளலைக் கண்டவர்கள் தூய்மையைக் கண்டார்; நெஞ்சை
அள்ளுமாறு உருவைக் கண்டோர் அவ்விடம் விட்டு நீங்கி
முள்ளமை உளத்தார்க் கெல்லாம் முகம்மதின் பெருமை சொன்னார். 48

நம் பழைய மறைகள் கூறியதுபோல் வந்தவர்

சொன்னதைக் கேட்ட காபிர் சூதர்கள் எல்லாம் கூடி
“அன்னதோர் பண்பின் மிக்கான் அரும்புவான் எனமறைகள்
சொன்னதோர் உண்மை உண்டு சூழ்புவி அதனில் தோன்றி
நன்னர்நம் வழக்கமெல்லாம் நசுக்குவான் என்றும் கண்டோம். 49

வளர்வதற்கு முன் அழித்து விட வேண்டும்

அரியவன் இவனே அந்த அகம்மதும் இவனே நம்மைக்
கரியவே தீய்க்க வந்தான் கனிந்திடும் முன்னே நாமும்
உரியவாம் வினைகள் செய்தே ஒழித்திட வேண்டும் என்று
விரியவே பேசிப் பேசி வியர்த்தனர்; நடுவில் ஒராள்; 50

வஞ்சகன் உரைத்த வழிமுறை

வஞ்சபுன் மனத்தான் தோன்றி வள்ளலை ஒழிப்ப தற்காம்
நஞ்சினும் கொடிய தொன்றை நாநயம் இன்றிச் சொன்னான்
எஞ்சியோர் அதையே செய்ய இசைந்தனர் ஒருங்கு கூடிக்
கொஞ்சியே பேசு வார்போல் குரிசிலார் எதிரே வந்தார். 51

அன்புள்ளவர் போல் நடிப்பாகப் பேசினார்

நாடியே வந்த காபிர் நால்வரும் ஐயன் தம்பால்
நீடிய அன்புகொண்டு நெருங்குவார் போல நின்று
கோடிய உளம் மறைத்துக் கொண்டங்கு வணங்கி, “ஐய
தேடியே வந்தோம் தங்கள் திருமுன்னர்” என்று சொன்னார். 52

உங்கள் பொருளை விலைபேச வந்தோம்

காரணம் என்ன? வென்று காபிரை நோக்கிக் கேட்டார்;
நேரினில் வந்த காபிர், “நேயனே! தாங்கள் தங்கள்
ஊரினில் இருந்து வந்த உறுபொருட் குவையை எல்லாம்
சேரவே விலைக்குத் தந்தால் சிறக்குமே” என்று கேட்டார். 53