பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்89


சொல்லிய விலைக்கு வாங்கிக் கொள்வோம்

கேட்டதைக் கேட்ட மக்கா கிளர்மன வணிகத் தார்கள்
ஓட்டமும் நடையு மாக ஓடிப்போய் எஞ்சி யுள்ள
ஈட்டமாம் மணியைப் பொன்னை எடுத்துவந் தீந்து நல்லார்
கேட்டதாம் விலைக்குக் கூடக் கேடின்றித் தர இசைந்தார்; 54

தாங்கள் எங்கள் இல்லத்துக்கு வருக

“உரியதாம் தொகையை நாங்கள் உம்மிடம் தருவதற்குப்
பெரியராம் தாங்கள் எங்கள் பெருமனை வருதல் வேண்டும்
விரிவதாம் ஒளியே கொண்டீர் விரைந்து நீர் வருக” என்றார்
கரியதாம் உள்ளம் கொண்ட காபிர்கள் நால்வர் ஆங்கே! 55

வஞ்சகர் வாழ் தெருவில் சென்றார்

வாய்மைபோல் உரைத்த அந்த வஞ்சகர் உரைமேற்கொண்டு
தாய்மையின் கனிவு கொண்ட தலைவனார் இல்லம் நீங்கித்
தூய்மைகொள் பாதம் மண்ணில் தோயாமல் நடந்து பொல்லாத்
தீமைசெய் திடவல்லாரின் தெருவினை நோக்கிப் போனார். 56

சென்ற இடமெல்லாம் சிறப்பு

இனியவர் வருகை பட்ட இடமெலாம் இனிமை அன்புப்
புனிதரின் பார்வைபட்ட புழுதிகள் புதுமை; தெய்வ
மனிதரின் கனிவு பட்ட மண்ணெலாம் மகிழ்மை காணக்
கனிதரும் முகத்து நல்லோர் காண்தொறும் உவகை பெற்றார். 57

காபிர்கள் தீமையே செய்தனர்

வழிஎங்கும் அற்பு தங்கள் வளர்ந்தன; காணுகின்ற
விழிஎங்கும் விண்ணலங்கள் விரிந்தன; மக்கள் செய்யும்
தொழிலெங்கும் தூய்மை பெற்றுத் துலங்கின; காபிர் சூதர்
பழிஎங்கும் பரவத் தாமோ பகைஎங்கும் நிறையச் செய்தார். 58

காபிர்களின் மனைக்குள் புகுந்தார்

மின்னொளி நபியார் முன்னே மிகையொளி காட்டிச் செல்லப்
பின்னொளிர் மைச றாவும் பெருகொளி நண்பர் தாமும்
இன்னொளி யோடும் தங்கள் இயல்பிலே நடந்து நெஞ்சின்
முன்னொளி இல்லாக் காபிர் முகமனைக் குள்ளே போனார். 59