|
பொய்யாகப் புகழ்ந்துரைத்தார்
வழியிடை இருந்த காபிர் வாய்மையை இழந்த நெஞ்சால்
எழிலுடன் வரவேற் பொன்றை இயற்றினார் போலச் செய்தார்;
கழிமுடை நாற்ற நாவால் “கனிந்த பேர் உருவே!” என்று
பழிஇடைப் பட்ட மாக்கள் பலபடப் புகழ்ந்து ரைத்தார். 60
வஞ்ச மனத்தால் வணங்கினார்
இருக்கையில் அமரச் செய்தே இருகையால் வணங்கித் தொட்டார்
உருக்கமாய்ப் பேசிப்பேசி உண்மையை மறைத்தே விட்டார்
நெருக்கமாய் இருப்பார் போல நேயத்தை மறந்து கெட்டார்
திருக்குரல் நெறியார் தாமோ தெளியார்முன்ஒளியார் ஆனார்; 61
குறிப்பால் காட்டிக் கல்லைத் தள்ளச் சொன்னான்
நஞ்சினார் காபிர் தம்முள் நடுவிலே இருந்தான் மற்றோர்
வஞ்சகக் காபிர் தன்னை வகையுடன் அழைத்து நீபோய்
அஞ்சாமல் கல்லைத் தள்ளு அழிவான்இம் மனிதன்என்றே
எஞ்சாத சைகைகாட்டி இமையினால் இயம்பி னானே. 62
முயற்சிசெய்து கல்லைத் தள்ள முயன்றான்
மாடிமேல் சென்ற காபிர் மலைஎனக் கிடந்த கல்லை
நாடிமேல் கைகள் வைத்து நசுக்குதல் போலக் காட்டிக்
கூடிய வலிமை எல்லாம் கூட்டியே புரட்டி விட்டு
நீடிய பணிசெய்வார்மேல் நேரிலே தள்ள எண்ணி; 63
கல் கையைப் பற்றிக் கொண்டது
பற்றினான் கல்லைக் கையால்; பதறினான் கல்தான் கையைப்
பற்றிடப் பதைபதைத்துப் பதிந்தன கைகள் உள்ளே
எற்றினான் கல்லைக் கையை எடுக்கவும் முயன்றான் ஆனால்
நெற்றிமெய் வியர்த்த தன்றி நெடுங்கையை எடுத்தான் அல்லன்; 64
மாட்டிக் கொண்டு துடித்தான்
காலினை ஊன்றிப் பார்த்தான் கழுத்தினை நிமிர்த்திப் பார்த்தான்
பாலினுக் கழும்சேய் போலப் பதறினான் திமிறிப் பார்த்தான்
வாலினைப் பெற்றில் லாத வானரம் போல்முகத்தான்
வேலிக்குள் மாட்டிக் கொண்ட வெள்ளாடு போல் துடித்தான்; 65
|