|
செய்வதறியாமல் கல்மேல் சாய்ந்தான்
இதழ்களைக் கடித்துக் கொண்டான் இருவிழி சிவந்த காபிர்
உதவிகள் செய்வார் இன்றி உள்ளத்தால் தவித்து நொந்தான்
உதறியும் கைகள் தம்மை விட்டுக்கல் பிரிய வில்லை
கதறவும் இயலா வண்ணம் கல்லின்மேல் சாய்ந்தான் பொல்லான். 66
போனவன் வரவில்லையே!
போனவன் ஏனோ கல்லைப் புரட்டவும் இல்லை மீண்டும்
ஏன் அவன் வரவும் இல்லை எனஎண்ணி மற்றைக் காபிர்
தீன்அவர் இடத்தில் செப்பித் தேடியே போவார் போல
மேனிலை மாடிப் பக்கம் மேவியே ஏறிப் போனார். 67
சுரணையற்றுக் கிடந்தவனைப் பார்த்தனர்
கல்லோடு காபிர் உள்ள காட்சியை நேரில் கண்டு
பல்லோடு இதழ் கடித்த பண்பினால் இரத்தம் சிந்தச்
சொல்லோடு சுரணை இன்றிச் சுருண்டவன் போலிருந்தான்
“கொல்-ஓடு-கல்தள்” ளென்று கூறினோம் செய்தான் அல்லன் 68
கைகளை எடுக்க முயன்றனர்
என்றவர் வியக்கக் கண்டார் எப்படி நிகழ்ந்த தென்று
நன்றிலார் காபிர் கூடி நசுக்கிடும் கல்லினின்று
ஒன்றிய கைகள்தம்மை உறுவலி கொண்டி ழுத்தார்
அன்றவன்பட்ட துன்பம் அல்லாவே அறிவான் அம்மா! 69
அனைவரின் முயற்சியும் தோற்றன
வலித்திடும் கைஎன் றாலும் வலிமையாய் இழுத்துப் பார்ப்போம்
நிலைத்திடும் கல்லைவிட்டு நீங்கலாம் கைகள் என்றே
மலைத்திடும் வீரர் போல மனிதனைப் பற்றி அன்னார்
உலைக்கூடத் தாள்கள் போல உரத்தொடும் இழுத்த போதில்; 70
கைகள் அறுபட்டன
“ஐயகோ மாட்டிக் கொண்டேன் அறியாமல்!” என்று கூறி
நையவே அழுதான் தன்கைந் நரம்பெலாம் அறுந்து வீழப்
பொய்யரின் பக்கம் அன்னோன் போயுடன் வீழ இற்ற
கையிரண் டவைகள் அந்தக் கல்லுக்குள் இருந்த வாலோ! 71
|