|
அனைவரும் நபியிடம் முறையிட வந்தனர்
“செய்வினை செய்த காபிர் சிறுமைகள் செய்து விட்டோம்
கைவினை நிகழ்ந்த தெல்லாம் கடவுளை இகழ்ந்த தாலே
பொய்வினை இல்லா தாரின் புகழினை அறிந்தோம் அல்லோம்
ஐயன்முன் ஓடிச் சென்றே அறிவிப்போம்” என்று கூறி; 72
ஐயா! தவறு செய்து விட்டோம்
முதியவன் தரகன் முன்னே மொழிந்தனர், “ஐய யாங்கள்
விதியினால் அறிவி ழந்தோம் வீரரின் நலம்என்னாமல்
புதியதோர் நெறியைக் கூறும் புண்ணியர் அவரைக் கொல்ல
அதிகமாய் முயன்றோம் ஆனால் அனைத்திலும் தோற்றோம்!”என்றார். 73
பெரியவர்க்குத் தீங்கு நினைக்காதீர்கள்
பெரியவன் தரகன் அஞ்சிப் பேசிய காபிர் முன்னே
“அரியவர் எவர்க்கும் நீங்கள் அறிவிலா தியற்றும் தீமை
எரிமுனர்க் கொசு போலாகும் எண்ணுங்கள் இதனை” என்றே
விரியவே அறிவுறுத்தி விளைவினைக் குத்திக் காட்டி; 74
தரகன் காபிர்களை முகம்மதுவிடம் அழைத்துப் போனான்
“புண்ணியர் வருவார் என்று புகன்றன மறைகள் அன்றோ?
திண்ணியர் இவரே என்று தெரியாமல் தவறு செய்தீர்!
கண்ணினால் அவரைக் கண்டு கலங்கியே உரைப்போம்” என்றே
எண்ணிய தரகன் காபிர் எலாரையும் அழைத்துப் போனான். 75
காபிர்கள் கல்லைத் தள்ள முயன்றனர்
வல்லவர் எதிர்போய் நின்று, “வள்ளலே! காபிர் எல்லாம்
நல்லவர் போலப் பேசி நடத்தினர் கூத்து நும்மைக்
கொல்லவே எண்ணிக் கொண்டு கொடுமைகள் பலவும் செய்து
தள்ளவே கல்லை உங்கள் தலைக்கு மேல் வைத்திருந்தார்; 76
புரியாத பேர்கள் தவறு செய்து விட்டார்
“புரியாத பேர்கள் அன்பைப் பொய்யென்று பிதற்றி விட்டார்
எரியாத விளக்குப் போன்ற இதயத்தார் தங்களாலே
சரியான பாடம் கற்றார் தலைவரே!” என்று போற்றி
மரியாதை யோடு வீழ்ந்து வருந்தினான் தரகன் தானே! 77
|