|
காபிர்களும் வருந்தி மன்னிப்புக் கேட்டனர்
அவனைப்பின் பற்றிக் காபிர் அனைவரும் “ஐய எங்கள்
தவற்றினைப் பொறுத்துக் காப்பீர் தகாதன புரிந்தோம்” என்று
நவையிலாப் பாதம் பற்றி நவின்றனர்; நபிகள் நல்லார்
இவைஎலாம் கேட்டுக் காபிர் இன்னலைத் தவிர்க்க எண்ணி; 78
கல்லையும் காபிரையும் கொண்டு வந்தனர்
“கல்லெங்கே? கைகள் எங்கே? காட்டுக” என்று கேட்டார்;
வில்லம்பே போதல் போல விரைந்தோடி மாடி ஏறிக்
கல்லும்கை யோடும் தூக்கிக் கையிற்ற ஆளும் தூக்கி
வெல்லம்போல் இனியகொள்கை விளைப்பார்முன் கொண்டு வந்தார். 79
அறுந்த கைம்மேல் தங்கள் கையை வைப்பீர்
“அருங்கையை இழந்து விட்ட அன்பரே! அறுந்த கையைக்
கருங்கல்லில் இருக்கும் கையில் கடவுளை நம்பி நைந்தே
இருங்கள்பின் எடுங்கள்” என்றே இயம்பிய கனிவைக் கேட்டு
மருங்குளோர் வியந்து காணமனிதனும் அதுபோல் செய்தான்; 80
கைகள் ஒட்டின
வைத்தகை வைத்த போதே வலியின்றி ஒட்டிக்கொள்ளத்
தைத்தகை போல அன்றித் தாய்தந்த கையே ஆக
கைத்த நெஞ்சுடையன் காபிர் கனிந்த நெஞ்சுடையன் ஆனான்
பொய்த்தவிர் அண்ணல் பாதம் மொய்த்தனர் காபிர் தாமே! 81
பணிவுடன் பேசி அனுப்பி வைத்தார்
“கன்னலே! எங்கள் வாழ்வைக் கனிவிக்க வந்த கோவே!
பின்னரே அறிந்தோம் தங்கள் பெருமையை” என்று கூறி
முன்னரே வைத்தோம் தங்கள் முழுத்தொகை என்று தந்து
பன்னரும் பெருமை பேசிப் பணிவுடன் அனுப்பி வைத்தார். 82
|