பக்கம் எண் :

94துரை-மாலிறையன்

முகம்மதுவைத் தொடர்ந்து தோழர் போயினர்

கல்லினைத் தள்ள வந்த கயவர்க்கும் கனிவு காட்டும்
நல்லவர் நபியார் தம்மை நாடிய வணிகர் தாமும்
வல்லியல் மைசறாவும் வணங்கியே பின்னால் ஏக
மல்லிகை மணச்சாலையில் மகம்மது நடந்து போனார். 83

தணல்பொறி தாக்கும் விலகிப் போங்கள்

இடைவிழி தனில்ஓர் கொல்லன் இரும்பினைக் காய்ச்சிக்காய்ச்சி
இடைவிடாது அடித்துக் கொண்டே இருந்தவன் முன்னே சென்றார்
தடையிலாது அடித்துக் கொல்லன் தணல்பொறி தாக்கும் தாக்கும்
இடைவெளி விட்டுப் போங்கள் எல்லாரும் எனவே கூற; 84

கொல்லன் சினந்தான்

“தீ வரும் இடத்தைத் தானே தீயவை எரிக்கும் மற்ற
ஆர்வலர் தம்மைத் தீயின் அரும்பொறி தீண்டாது” என்றார்
காவலர் கூறக் கேட்டுக் கடுஞ்சினம் அடைந்த கொல்லன்
நாவினைக் கடித்துத் தீயின் நாவெழ இரும்படித்தான். 85

தீப்பொறி சுடவில்லை

காய்ச்சிய இரும்பி னின்று கடும்பொறி சிதறி மின்னிப்
போய்ச்செம்மல் மேனி எல்லாம் பொசுக்கிட வீழ்ந்தும் வாய்மை
வாய்ச் சொல்லார் உரைபொய்யாமல் வந்தவை குளிர்ந்து சந்தம்
தேய்ச்சளித் திட்ட தைப்போல் திருமேனி தொட்ட வாமே! 86

நீங்கள் யார்? உங்கள் பேர் என்ன?

தீப்பொறி கூட மேனி தீண்டாமல் குளிரக், கொல்லன்
நாப்பொலி மன்னர் நன்மை நாடவே வேண்டும் என்று
“பூப்படர் மேனி யாரே! புகலுக உம்மைப் பெற்றுக்
காப்பவர் ஆர்பேர் என்ன? கனிவுடன் கூறுக” என்றான். 87