110நாமக்கல் கவிஞர் பாடல்கள்

‘பண்டித‘ ராகவே பண்டிதர் இருந்தார்.
இடக்கை விரல்கள் இரண்டை நீட்டி
கருத்துக் கேற்பக் கையை ஆட்டி
வலக்கைத் தலத்தில் அடித்து வைத்துச்
சங்கீத மத்தியில் சாப்புப் போல       135

அடித்துப் பேசி அழுத்தம் திருத்தமாய்ச்
சுளைகளை யாகச் சொற்களைச் சொல்லிப்
பதம்பத மாகப் பதியும் படிக்கே
அணியணி யாக அடுக்கிய கருத்தொடும்
இயக்கி விட்டதோர் எந்திரம் போலத்       140

தங்கு தடையெனல் எங்குமில் லாமல்
எத்தனை தூரம் எட்டநின் றாலும்
கணீர்க ணீரெனக் காதிலே விழும்படி
செவிவழி இனிக்கும் செந்தேன் போலக்
கற்பனை மிகுந்த கவினுடைக் கவிதையாய்க்       145

காதாற் காணும் கனவே போலத்
தொல்காப் பியத்தின் சூத்திரம் தொடரச்
சங்க நூல்களின் சாறு வடித்துச்
சிலப்பதி கார ஒலிப்பும் சேர்த்துத்
திருக்குறள் ஞானப் பெருக்கம் திகழத்       150

திருமந் திரத்தின் பெருமை திரட்டிக்
கம்பன் பாட்டின் செம்பொருள் பெய்து
தேவார த்தின் திருவருள் கூட்டித்
திருவா சகத்தின் தேன்சுவை நிறைத்துத்
திருவாய் மொழியின் தெளிவையும் ஊட்டி       155

எம்மத மாயினும் சம்மதம் என்னும்
சமரச சுத்தசன் மார்க்கம் தழுவிப்
பண்டைய அறிவைப் புதுமையிற் பதித்துப்
பண்டிதர் பிறரிடம் பார்த்தறி யாத
அரசியல் சரித்திர அறிவுகள் பொருத்திக்       160