பல்லவி கொடிபறக்குது கொடிபறக்குது கொடி பறக்குது பாரடா! கோணலற்ற கோலில் எங்கள் கொடிபறக்குது பாரடா! சரணங்கள் சிறைகிடந்து துயரமடைந்த தேசபக்தர் நட்டது தீரவீர சூரரான தெய்வபக்தர் தொட்டது. முறைகடந்து துன்பம் வந்து மூண்டுவிட்ட போதிலும் முன்னிருந்து பின்னிடாமல் காக்கவேண்டும் நாமிதை! (கொடி)1 வீடிழந்து நாடலைந்து வினையிழந்த நாளிலும் விட்டிடாத தேசபக்தர் கட்டிநின்று காத்தது; மாடிழந்து கன்றிழந்து மனையிழக்க நேரினும் மானமாக நாமுமிந்தக் கொடியைக்காக்க வேண்டுமே! (கொடி)2 உடலுழைத்துப் பொருள்கொடுத்தும் உயிரும்தந்த உத்தமர் உண்மையான தேசபத்தர் ஊன்றிவைத்த கொடிஇது; கடல் கொதித்த தென்னமிக்க கஷ்டம் வந்த போதிலும் கட்டி நின்று விட்டிடாமல் காக்கவேண்டும் நாமிதை! (கொடி)3 |