புலவர் சிவ. கன்னியப்பன் 19


நீதந்த உடல்கொண்டு நின்புகழ் துதிக்குமுன்
நோய்வந்து புகுந்தெம்மை நொடிக்குள் மடிப்பதென்றால்
தாய்தந்தை நீயன்றித் தஞ்சம் பிறிதுமுண்டோ?
வாய்தந்து வாவென்று வரமருள்வாய் தேவீ!

தாயை மறந்திருக்கும் குழந்தைகள் சகஜந்தான்!
சேயை மறந்தவளைச் செகமின்னுங் கண்டதில்லை
நீயே எமைமறந்தால் நிலையெமக் கேதுவேறே?
நோயே மிகநலிய நொந்தனம், வந்தருள்!

நித்தம் உனைநினைந்து நியம முடன்வசிக்கச்
சுத்த மனநிலையும் சொல்லும்செய லும்தந்து
சுற்றும் பலபிணிகள் தொடரா தருள்புரியாய்
சத்திய மாய்விளங்கும் தேவீ பராசக்தி!

7. மாயக் கண்ணன்

கண்ணன் பக்தி சேர்ந்திடில்
       கவலை யாவும் தீர்ந்திடும்
மண்ணை வாரித் தின்றவன்;
       மலையைத் தூக்கி நின்றவன்.       (கண்)1

வீட்டில் திருடும் வெண்ணெயை
       வெளியில் தானம் பண்ணுவான்;
நாட்டில் சிறுவர் யாவரும்
       நன்மை கொள்ளக் கூவுவான்.       (கண்)2

பெண்ணைக் காணில் ஓடுவான்;
       பிறரைக் காணில் வாடுவான்
எண்ணம் என்ன தீயதோ!
       இல்லை; முற்றும் தூயதே.       (கண்)3

எண்ணி றந்த கோபிகள்
       இவனு டன்சல் லாபிகள்!
பெண்ணில் காமம் அல்லவே
       பிள்ளை பெற்ற தில்லையே.       (கண்)4